UAE Tamil Web

பேய்களின் நகரமாக மாறிப்போன அல் ஜசிரத் அல் ஹம்ரா : அமீரகத்தில் 50 வருடங்களுக்கு முன்பு தனித்துவிடப்பட்ட பிரம்மாண்ட நகரம்..!

An-aerial-shot-of-Al-Jazirat-Al-Hamra

வானளாவிய கட்டிடம், வியக்க வைக்கும் உட்கட்டமைப்பு, செழித்த பொருளாதாரம் ஆகியவற்றின் மூலமாக அறியப்படும் அமீரகத்திற்கு இன்னொரு விசித்திர முகமும் இருக்கிறது. ஒருபக்கம் கட்டிடக்கலையில் நவீன தொளில்நுட்பத்தைப் பயன்படுத்தும் இதே அமீரகத்தில் கைவிடப்பட்ட, பாழடைந்த, விரிசலில் வளர்ந்த செடியுடன் காட்சியளிக்கும் வீடுகளைக்கொண்ட மர்ம நகரங்களும் இருக்கின்றன.

இவற்றை அரசும் கைவிட்டுவிட்டதால் இந்த தனித்துவிடப்பட நகரங்களைப் பற்றிய பல்வேறு கதைகள் பொதுவெளியில் உலவுகின்றன. அந்த லிஸ்டில் முக்கியமானது ராஸ் அல் கைமாவில் இருக்கும் அல் ஜசிரத் அல் ஹம்ரா.

Al Jazirat Al Hamra
Image Credit: Behence

துருவின் நிறத்தில் விரிந்திருக்கும் மணல், ஆண்டுக்கணக்கில் வீசிய உப்புக் காற்றுக்கு இரையான கட்டிடங்கள், குடும்பங்கள் செழித்திருந்த நாட்களில் பயன்படுத்தப்பட்ட படகுகள், வீடுகளுக்குள் முளைத்திருக்கும் செடிகள், சிதிலமடைந்த பழைய மசூதி என பார்த்தவுடன் கிலி ஏற்படுத்தும் இந்த நகரம் ஒருகாலத்தில் ஜேஜே வென இருந்தது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.

அல் ஜசிரத் அல் ஹம்ராவின் வரலாற்றை 1820 ஆம் ஆண்டிலிருந்து துவங்கினால் சரியாக இருக்கும். ஏனெனில் தனித்தனியாக இருந்த எமிரேட்களில் பிரிட்டிஷின் அதிகாரம் உச்சம் தொட்டிருந்த சமயம். அல் ஜசிரத் அல் ஹம்ராவின் ஆட்சியாளராக இருந்த ரஜிப் பின் அகமது ட்ரூசியல் ஸ்டேட்ஸ் என்று அழைக்கப்பட்ட எமிரேட்கள் மற்றும் பிரிட்டிஷ் இடையேயான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

Historical-village-Al-Jazirat-Al-Hamra-Ras-Al-Khaimah-1536x1024
Image Credit: bordersofadventure

அவரு ஏன்? கையெழுத்து போடணும்? அதற்கு பதில் சொல்லவேண்டுமென்றால் அதற்கு முந்தைய ஆண்டு அதாவது 1819 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் மீது நடத்தப்பட்ட தாக்குதல் பற்றிச் சொல்லவேண்டும். என்ன ஆச்சுன்னா…. செங்கடல் வழியாக சென்றுகொண்டிருந்த பிரிட்டிஷின் கப்பல்…. இருங்கள்… நாம் ஏன் செங்கடலுக்கு எல்லாம் போகணும்? ட்ரூசியல் ஸ்டேட்ஸ் பிரிட்டிஷ் கைக்குப் போனது. அவ்வளவுதான் கதை. நாம் மர்ம நகரத்திற்கே திரும்பிவிடலாம்.

1830 களிலேயே இங்கே சுமார் 200 பேர் இருந்திருக்கின்றனர். இவர்கள் அனைவரும் ஸாப் (Zaab) பழங்குடியின மக்களாவர். கடற்கரை கிராமம் என்பதால் இங்கு வசித்த பெரும்பாலனவர்கள் மீனவர்கள்தான். மீன்பிடித்தல் மட்டுமல்லாது பிற்காலத்தில் முத்துக் குளித்தலும் இங்கே பிரபலமாகியிருக்கிறது. அள்ள அள்ளக் குறையாத கடல் வளம் இங்கு வசித்துவந்தவர்களின் நிம்மதிக்கான காரணமாக இருந்தது.

Ghost-village-Al-Jazirat-Al-Hamra-Ras-Al-Khaimah-1536x1024
Image Credit: bordersofadventure

1920 களின் துவக்கத்தில் முத்தெடுத்தல் இங்கே பிரதான தொழிலாக மாறியது. அதனால் மக்களின் கைகளில் செல்வமும் பெருகியது. நவீன வசதியுடன் கூடிய படகுகளை இவர்கள் பயன்படுத்தியிருக்கிறார்கள். ஆகவே, தொழில்நுட்பம் குறித்த அறிவும் இவர்களுக்கு இருந்தது புலனாகிறது. இப்படி மேல்நோக்கி சென்றுகொண்டிருந்த அல் ஜசிரத் அல் ஹம்ராவின் வளர்ச்சி, திடீரென வீழ்ச்சியை சந்தித்தது. ஆண்டுக்கணக்கில் வசித்திருந்த இடத்தைவிட்டு மக்கள் வெளியேறினார்கள்.

கடைகள், போக்குவரத்து என பரபரப்பாக இருந்த நகரம் வெறிச்சோடியது. பொதுவாகவே இப்படியான ஆளில்லாத நகரங்கள் இருந்தால் முதலில் அங்கே குடியேறுவது வதந்திகள் தான். அப்படி, இந்த நகரத்திற்கும் ஏராளமான கதைகள் உண்டு.

இந்த நகரத்தின் பூர்வ குடிகளின் ஆவி, இங்கு குடியேறியவர்களை தாக்கியதாகவும், தொடர்ந்து தொல்லை கொடுப்பதாகவும் கைதை உண்டு. காசா.. பணமா… அள்ளிவிடு… கணக்காக இப்படி பல்வேறு கதைகள் இந்த கைவிடப்பட்ட நகரத்தைப் பற்றி இருக்கத்தான் செய்கின்றன. ஆனால், செல்வத்தோடும் கணிசமான மக்கள் தொகையுடனும் இருந்த நகரம் திடீரென ஆளில்லாத பேய் நகரமாக மாறியதற்கு என்ன காரணம்? பார்ப்போம்.

Abandoned-car-Al-Jazirat-Al-Hamra-Ras-Al-Khaimah-1536x1024
Image Credit: bordersofadventure

ஆரம்பம் முதலே அல் ஜசிரத் அல் ஹம்ராவில் சிக்கல் என்று பார்த்தால் இரண்டுதான். ஆனால் இரண்டும் ஒன்றோடொன்று தொடர்புடையவை. அவை, யார் அல் ஜசிரத் அல் ஹம்ராவை ஆள்வது? இதன் காரணமாக ஏற்பட்ட அரசுகளிடையே ஏற்பட்ட மோதல்கள். என்னதான் பிரிட்டிஷார் கட்டுப்பாட்டில் இருந்தாலும் அல் ஜசிரத் அல் ஹம்ரா ஷார்ஜா ஆட்சியாளரின் கீழ் இருந்தது. புரியவில்லையா..? இப்படிச் சொன்னால் புரியும். பிரதமர் – முதல்வர் – MLA வரிசையில் ரஜிப் தான் MLA. ஷார்ஜா முதல்வராக இருக்கும் பட்சத்தில் பிரிட்டிஷ் தான் பிரதமர். இப்போது ரூட் புரிகிறதா..?

இந்தப் பகுதியின் வளம் காரணமாக யார் அல் ஜசிரத் அல் ஹம்ராவை வளைத்துக்கொள்வது என்பதில் கடும்போட்டி இருந்தது. இப்படிச் சென்றுகொண்டிருந்த நேரத்தில் பலகட்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு 1914 ஆம் ஆண்டு “சரி, நீயே வச்சுக்கோ” என ஷார்ஜா ஆட்சியாளர் விட்டுக்கொடுக்க, ராஸ் அல் கைமாவின் கட்டுப்பாட்டிற்குள் வந்தது அல் ஜசிரத் அல் ஹம்ரா. சரி பிரச்சினை முடிந்தது என்றால் விட்ட குறை தொட்ட குறையாக அவ்வப்போது சண்டைகள் வரத்தான் செய்தன.

Al-Jazirat-Al-Hamra-Ras-Al-Khaimah-
Image Credit: bordersofadventure

இதெற்கெல்லாம் உச்சமாக 1968 ஒரு சிக்கல் வந்தது. ராஸ் அல் கைமா ஆட்சியாளர் ஷேக் சக்ர் பின் முகமது அல் காசிமிக்கும் அபுதாபி ஆட்சியாளர் ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யானுக்கும் இடையே அல் ஜசிரத் அல் ஹம்ராவை முன்வைத்து கருத்து மோதல்கள் எழுந்தன.

அப்போது அல் ஜசிரத் அல் ஹம்ராவில் வசிக்கும் மக்கள் தன்னை நம்பி வருமாறு அபுதாபி ஆட்சியாளர் அழைப்பு விடுத்தார். இதனை ஏற்றுக்கொண்ட மக்களும் பெருமளவில் அபுதாபிக்கு குடிபெயர்ந்தனர். ஆண்டு 1968. இது ஒரு மாபெரும் வரலாற்று நிகழ்வாகும். சொந்த வீடு, செய்த தொழில் என அனைத்தையும் உதறிவிட்டு மந்திரச் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள் போல அபுதாபி ஆட்சியாளரின் ஒற்றை வார்த்தையை நம்பி அபுதாபிக்குப் பயணமானார்கள் அல் ஜசிரத் அல் ஹம்ரா மக்கள். இந்தக் காலகட்டத்தில் சுமார் 2500 பேர் அபுதாபிக்கு வந்ததாக சில ஆய்வாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

Al-Jazirat-Al-Hamra-village-Ras-Al-Khaimah-Ghost-Town-1536x1024
Image Credit: bordersofadventure

இதையே மற்றொரு கோணத்திலிருந்தும் விவரிக்கலாம். எண்ணெய் வளம் அமீரகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட நாட்களில், சில வருடங்களில் உலகின் முக்கிய நாடாக அமீரகம் இருக்கும் என பலரும் நம்பினார்கள். பெரும் எமிரேட்கள் அசுர வளர்ச்சியை அடைந்தன. அந்த காலகட்டத்தில் எண்ணெய் வளம் இல்லாத பகுதிகளில் வசித்த மக்கள், பெரும் நகரங்களுக்கு செல்வமீட்ட கிளம்பினர். ஆகவே அல் ஜசிரத் அல் ஹம்ரா மக்கள் பொருளாதார வளர்ச்சிக்கான பாதையை தேர்ந்தெடுக்க யோசித்துக்கொண்டிருந்த சமயம், அபுதாபி ஆட்சியாளர் அந்த அறிவிப்பையும் வெளியிட்டார். அதற்காக காத்திருந்த மக்கள் வாய்ப்பை சரியாக பயன்படுத்திகொண்டனர்.

Al-Jazirat-Al-Hamra-Ras-Al-Khaimah-Abandoned-town-
Image Credit: bordersofadventure

அல் ஜசிரத் அல் ஹம்ராவில் வசித்தவர்களின் வாரிசுகள் இன்றும் தங்களது பூர்வீக நிலத்திற்கு சென்று, அதன் தொன்மத்தை ரசித்து வருகிறார்கள். கடைசியாக 2012 ஆம் ஆண்டு பூர்வகுடிகளின் வாரிசுகள் சிறிய விருந்து ஒன்றினை நடத்தினர். மணல், கற்கள், சுண்ணாம்பு என அந்தப் பகுதியில் கிடைக்கும் பொருட்களைக்கொண்டு இந்த வீடுகள் கட்டப்பட்டிருக்கின்றன. குடிசைகள் பேரீச்சம்பழ கீற்றுகளினால் வேயப்பட்டிருக்கின்றன.

காலமும், காற்றும் நடத்திய தாக்குதலில் சேதமடைந்திருந்தாலும் அமீரகத்தின் ஆதிகால வரலாற்றை தன்னகத்தே கொண்டுள்ள சில இடங்களில் அல் ஜசிரத் அல் ஹம்ராவும் ஒன்றாகக் கருதப்படுகிறது. வாய்ப்பிருப்பவர்கள் மறக்காமல் அல் ஜசிரத் அல் ஹம்ராவிற்குச் சென்றுவாருங்கள்.

An-aerial-shot-of-Al-Jazirat-Al-Hamra
56 Shares
Share via
Copy link