UAE Tamil Web

இனி துபாயிலிருந்து அபுதாபிக்கு வெறும் 12 நிமிடங்களில் பயணிக்கலாம்: சோதனையில் வெற்றிபெற்ற ஹைப்பர்லூப் வாகனம் – உலகத்தை திரும்பிப் பார்க்க வைத்த அமீரகம்..!

Virgin-Hyperloop_

“துபாயிலிருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் பயணிக்கலாம்” என்பதைப் படித்தவுடன் நம்புவதற்கு கொஞ்சம் கடினமாக இருக்கலாம். ஆனால் அதற்கான அடித்தளத்தை அறிவியல் அமைத்துக்கொடுத்திருக்கிறது. இரு நகரங்களையும் இணைக்கும் ஒரு பிரம்மாண்ட குழாய். அதனுள்ளே மணிக்கு 1000 கிலோமீட்டர் வேகத்தில் பயணிக்கக்கூடிய இல்லை பறக்கக்கூடிய பெட்டிகள். இதுதான். இவ்வளவுதான்.

ஹைப்பர்லூப் ஒன், வெர்ஜின் ஹைப்பர்லூப் என பொதுவாக அழைக்கப்பட்டாலும் துபாய் – அபுதாபி இடையே இயக்கப்பட இருப்பதால் இதனை துபாய் ஹைப்பர்லூப் என்றே அழைக்கின்றனர். துபாய் டிபி வேர்ல்ட் நிறுவனத்தின் பெரும்பான்மையான முதலீட்டில் பில்லியன் கணக்கில் காசை கொட்டி உருவாக்கப்படும் இந்த போக்குவரத்து எதிர்காலத்தில் நாடுகளையும் இணைக்கும் என்பது எவ்விதத்திலும் மிகையில்லை.

ஹைப்பர்லூப்

“வெற்றிடத்தில் அதிவேகத்தில் பொருட்களை இயக்குவது” இதுதான் இந்த திட்டத்தின் பிள்ளையார் சுழி. போட்டவர் பிரபல தொழிலதிபரான எலான் மஸ்க். எலெக்ட்ரிக் ப்ரோபல்ஷன் மற்றும் மேக்னடிக் லெவிடேஷன் (Electric propulsion and Magnetic levitation) தமிழில் சொன்னால் மின்சார உந்துவிசை மற்றும் காந்த விலக்கு விசையினால் பொருளை மிதக்கச் செய்தல். இந்த தத்துவங்களுக்கு உட்பட்டு இந்த போக்குவரத்து நடைபெறுகிறது.

சிறப்பம்சங்கள்

  • துபாய் – அபுதாபி இடையே இயக்கப்படும் ஹைப்பர்லூப் 100 சதவிகித மின்சார உந்துவிசையினால் இயக்கப்பட உள்ளது.
  • மணிக்கு அதிகபட்சமாக 1,123 கிலோமீட்டர் வேகத்திலும் சராசரியாக மணிக்கு 500 – 600 மைல் வேகத்தில் சீறிப்பாயும் வல்லமை கொண்டது இந்த ராட்சச போக்குவரத்துப் பெட்டி.
  • சரி சப்தம்? ம்ஹூம். வாய்ப்பே இல்லை. உங்களுக்கு மெதுவாக, மிக மெதுவாக காற்று உரசும் சப்தம் கேட்கலாம். அதனால் ஒலி மாசுபாடு என்ற வாதம் அங்கேயே நின்றுவிடுகிறது.
  • ஒரு ஹைப்பர்லூப்பில் பாட்கள் (Pod) எனப்படும் பெட்டிகள் தேவைக்கேற்ப பொருத்தப்படும். அதாவது ரயில் ஹைப்பர்லூப் என்றால் பெட்டிகள் தான் பாட் என்று வைத்துக்கொள்ளுங்கள்.
  • இதில் இரண்டு வகையான கிளாஸ் இருக்கும். ஒன்று கோல்டன் கிளாஸ். அதில் நான்கு பேர் வரையிலும் அமரலாம். இரண்டாவது சில்வர் கிளாஸ் இதில் 18 பேர் வரையிலும் அனுமதிக்கப்படுவார்கள்.
  • துபாயில் புர்ஜ் கலீஃபா அருகிலும், அபுதாபியில் எதிஹாட் டவர்ஸ் அருகிலும் ஹைப்பர்லூப் ஸ்டேஷன்கள் அமைய இருக்கின்றன.
  • இதனை இயக்க டிரைவர் தேவையில்லை என்பதால் டிரைவரின் பிழையினால் விபத்து என்பதற்கு இங்கே வாய்ப்பில்லை.
  • மிக முக்கிய சிறப்பம்சமாக பார்க்கப்படுவது நேர மிச்சமும், சுற்றுச்சூழல் பாதுகாப்பும் தான். இவையனைத்தையுமே கணக்கில் கொண்டுதான் துபாய் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் இந்த திட்டத்தை முன்னெடுத்தது.
  • மருத்துவத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளின் வளர்ச்சியை அடுத்தகட்டத்திற்கு எடுத்துச்செல்லும் வலிமை இந்த திட்டத்திற்கு இருப்பதால், அமீரகத்தின் பொருளாதாரத்தை மேலும் ஸ்திரப்படுத்த இது நிச்சயம் உதவும்.
  • இரு நகரங்களில் இருந்தும் ஒருமணி நேரத்திற்கு 10,000 பேர் பயணிக்கலாம். ஆகவே அமீரக போக்குவரத்து வரலாற்றின் மைல்கல் இந்த ஹைப்பர்லூப் திட்டமாகத்தான் இருக்கும்.

வடிவமைப்பு

பயணிகள் மட்டுமல்லாமல் சரக்குப் போக்குவரத்திற்கும் இது பயன்படுத்தப்படும் என்பதால் கார்கோ பாட்கள் முன்னிலையில் இடம்பெறுகின்றன. அதன்பின்னர் பயணிகளுக்கான பாட்கள். இந்த பாட்கள் டிரான்ஸ்போர்டருக்குள் இணைக்கப்பட்டிருக்கும்.

இந்த டிரான்ஸ்போர்ட் சமாச்சாரம் தான் மேலே சொன்ன எலெக்ட்ரிக் ப்ரோபல்ஷன் என்னும் வேலையை செய்யும். இவையனைத்தும் ராட்சத குழாய்க்குள் நுழைந்தவுடனேயே பயணத்தைத் துவங்கும்.

ஹைப்பர் லூப்பின் முன்பகுதியில் ஆண்டிலாக் பொருத்தப்பட்டுள்ளது. எமெர்ஜென்சி எக்ஸிட் வாய்ப்பும் இதில் கொடுக்கப்பட்டுள்ளது.

சோதனை வெற்றி

அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் உள்ள நெவேடா பகுதியில் அமைந்திருக்கும் வெர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தின் 500 மீட்டர் நீளமுள்ள சோதனை மையத்தில் வெற்றிகரமாக ஹைப்பர்லூப் வாகனம் இயக்கப்பட்டுள்ளது. இதில் சிறப்பம்சம் என்னவென்றால் இரண்டு நபர்கள் இந்த ஹைப்பர்லூபிற்குள் அமர்ந்தபடி பரிசோதனையானது நிகழ்த்தப்பட்டிருக்கிறது.

Virgin-Hyperloop_175abb4d2a2_original-ratio
Image Credit: Gulf News

இதற்கு முன்னர் ஆளில்லா வாகனம் சோதனைகளுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. XP-2 எனப் பெயரிடப்பட்ட இந்த சோதனை வாகனத்தை ஜார்கே இங்கெல்ஸ் குழுமம் வடிவமைத்தது.

பொருளாதார பயன்பாட்டிற்கு வருகையில் அதிகபட்சமாக 28 பேர் வரையிலும் இதில் அமரலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முழு சோதனையும் பாதுகாப்பு மதிப்பீட்டாளர் ஒருவரின் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டு வெற்றிபெற்றிருக்கிறது.

நாங்கள் சாதித்துவிட்டோம்

“வரலாறு என் கண்முன்னே எழுதப்படுவதை நான் பரவசத்துடன் பார்த்திருந்தேன். கடந்த நூறு வருடங்களில் போக்குவரத்துத் துறையில் நிகழ்ந்த அற்புதங்களை நான் பார்த்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த தொழில்நுட்பத்தை பாதுகாப்பானதாக உருவாக்கும் வல்லமை வெர்ஜின் ஹைப்பர்லூப் குழுவிற்கு உண்டு என தீர்க்கமாக நம்பினேன். இப்போது நாங்கள் அதனை சாதித்துவிட்டோம்” என வெர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தின் தலைவரும் துபாய் டிபி வேர்ல்டு நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும் தலைவருமான சுல்தான் அகமது பின் சுலயேம் (Sultan Ahmed bin Sulayem) தெரிவித்திருக்கிறார்.

“ஹைப்பர்லூப் பயணம் பாதுகாப்பானதுதானா? என்ற சந்தேகம் எனக்கு எப்போதும் இருந்தது. அதற்கான விடை இந்த பரிசோதனையின் மூலம் கிடைத்திருக்கிறது. மனிதர்களை இந்த பயண சோதனையில் ஈடுபடுத்தி அதற்கான பாதுகாப்பு அங்கீகார சான்றிதழை பெற்றிருப்பது எங்கள் நிறுவனத்தின்மீது மட்டுமல்லாமல் இப்பயணத்தின் மீதும் நம்பிக்கைத்தன்மையை அதிகரிக்கச்செய்யும்” என வெர்ஜின் ஹைப்பர்லூப் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஜெய் வல்தேர் தெரிவித்தார்.

எதிர்காலத்தில் அமீரகம் – சவூதி இடையே போடப்பட இருக்கும் ஹைப்பர்லூப் பாதைக்கு இன்றே பச்சைவிளக்கு காட்டியிருக்கிறது இந்த சோதனை. அமீரகத்தைப் பொறுத்தவரையில் கடந்த ஆண்டே துபாய் இண்டர்நேஷனல் மோட்டார் கண்காட்சியில் ஹைப்பர் லூப்பின் மாடல் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது.

எப்போது இது சாத்தியமாகும்? என பெருமூச்சுடன் கடந்தவர்களுக்கு இன்னும் சில மாதங்களில் விடை கிடைக்கும் என நம்பலாம்.