UAE Tamil Web

எக்ஸ்போ 2020 துபாய் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும்.!

Expo 2020 Dubai

அமீரகத்தில் திரும்பும் திசையெல்லாம் எக்ஸ்போ 2020 பற்றி தான் பேச்சு. இது என்ன? இன்னொரு குளோபல் வில்லெஜா? புதிதாக இதில் என்ன இருக்க போகிறது? எதற்காக இவ்வளவு ஏற்பாடுகள்? என்பன போல பல கேள்விகள் புரியா புதிர் போல பலரின் மனதில் ஊசலாடுகின்றன. சிலருக்கு தெரிந்து இருக்கின்றது, பலர் இந்த புதிருக்கு விடை தெரிய முயற்சி செய்யும் முன்னே நாட்கள் கடந்து செல்கின்றன. இந்த அனைத்து கேள்விகளுக்கும் விடையளிக்கவே இந்த பிரத்யேகமான தொகுப்பு.

- Advertisment -

எக்ஸ்போ 2020 என்றால் என்ன?

அரபு உலகில் இதுவரை நடத்தப்பட்ட நிகழ்வுகளிலேயே மிகப்பெரிய நிகழ்வு! வரலாற்றை புரட்ட இருக்கும் பெரும் ஏற்பாடுகள்! எதிர்கால கனவுகளின் திறவுகோல்.! மனித திறமை மற்றும் சாதனைகளின் கொண்டாட்டமாக உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் மக்கள் இணைவதற்கும், கலை, கலாச்சாரம், புவியியல், அறிவியல், தொழில்நுட்பம், புதுமை மற்றும் கண்டுபிடிப்பு ஆகியவற்றை அனுபவிப்பதற்கும், நீடித்திருக்கும் மில்லியன் கணக்கான புதிய எண்ணங்களையும் யோசனைகளையும் கற்பதற்கும், பிறருக்கு கற்று கொடுப்பதற்கும் இது ஒரு அறிய வாய்ப்பு என அனைவரும் நம்புகின்றனர்.

எக்ஸ்போ 2020 துபாய் மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் தெற்காசியா (MEASA) பகுதியில் நடைபெறும் முதல் உலக எக்ஸ்போ ஆகும். மேலும், இது அரபு நாடுகளிலேயே நடத்தப்படும் முதல் உலக கண்காட்சி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதில் 192 நாடு பவிலியன்களின் கண்காட்சிகள், நேரடி பொழுதுபோக்கு, மறக்கமுடியாத சந்திப்பு இடங்கள், நகைச்சுவையான ஹேங்கவுட்கள் மற்றும் ஏராளமானவை இடம் பெறவுள்ளது.

மக்கள் பலருக்கு இதன் நோக்கம் புரியாததால், இதை மற்றொரு குளோபல் விலேஜ் என கருதுகிறார்கள். ஆனால் அது தவறு. குளோபல் விலேஜ் என்பது, பல நாடுகள் ஒன்றிணைந்து, தன் நாட்டின் சிறப்பம்சங்களையும், கலாச்சார முறைகளையும் பிறருக்கு எடுத்துரைப்பதற்கான ஒரு பொழுதுபோக்கு நிறைந்த இடமாகும். ஆனால் எக்ஸ்போ 2020 முற்றிலும் எதிர்கால சிந்தனையுடன் புதிய புதிய கண்டுபிடிப்புகளை பல பொழுதுபோக்குகளுடன் உலகிற்கு அறிமுகப்படுத்தும் மாபெரும் வாய்ப்பாகும்.

மாற்றப்பட்ட தேதி

கொரோனா உலக இயக்கத்தை ஸ்தம்பிக்க வைத்திருப்பதால் பொதுமக்களின் நலன் கருதி துபாய் எக்ஸ்போ 2020 ஒரு வருடத்திற்கு ஒத்திவைப்பதாக அரசு கடந்த மே மாதத்தில் அறிவித்தது. மாற்றியமைக்கப்பட்ட தேதி மற்றும் நேரங்கள் பின்வருமாறு.

தேதிகள் மற்றும் நேரங்கள்:

  • தொடக்க நாள்: அக்டோபர் 1, 2021
  • நிறைவு நாள்: மார்ச் 31, 2022
  • வார நாட்கள்: காலை 10:00 மணி முதல் நள்ளிரவு வரை
  • வார இறுதி நாட்கள் மற்றும் சிறப்பு நாட்கள்: காலை 10 முதல் 2 மணி வரை

எக்ஸ்போ 2020 தளம் எங்குள்ளது?

4.38 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் துபாயின் தெற்கு மாவட்டத்தில், அல் மக்தூம் சர்வதேச விமான நிலையத்திற்கு அருகில் அமைந்திருக்கிறது. மேலும் துபாய் சர்வதேச விமான நிலையம், அபுதாபி சர்வதேச விமான நிலையம் மற்றும் துபாய் குரூஸ் டெர்மினல் மற்றும் அபுதாபி குரூஸ் டெர்மினல்களை (CRUISE TERMINAL) எளிதில் அடையக்கூடியதாக இந்த தளம் அமைந்துள்ளது.

எவ்வாறு எக்ஸ்போ 2020 தளத்தை அடைய முடியும்?

டவுன்டவுன் துபாயிலிருந்து (Downtown Dubai) எக்ஸ்போ தளத்தை அடைய கார் மூலம் 40 நிமிடங்கள் ஆகும்.

நீங்கள் துபாய் மெட்ரோவையும் பயன்படுத்தலாம். எக்ஸ்போ 2020 பார்வையாளர்களுக்காக பிரத்யேக மெட்ரோ போக்குவரத்தை ஏற்பாடு செய்துள்ளன. அவை ஒரு மணி நேரத்திற்கு 40,000 பயணிகளை தளத்திற்கு உள்ளே மற்றும் வெளியே கொண்டு செல்லக்கூடிய அளவு திறன் கொண்டவை.

நீங்கள் துபாய் மெட்ரோ போக்குவரத்தை பயன்படுத்துவராக இருந்தால் முதலில் துபாய் மெட்ரோவின் விதிமீறல்கள் மற்றும் அபராதங்கள் பற்றி தெரிந்துகொள்வதும் சிறந்தது.

முதல் உலக கண்காட்சி எது? இதற்கு முன் உலக கண்காட்சிகள் எந்தெந்த நாட்டில் நிகழ்ந்தது?

முதல் உலக எக்ஸ்போ 1851 ஆம் ஆண்டு லண்டனில் மிகப்பெரிய அளவில் நடந்தது. அதன் பின்னர் உலக எக்ஸ்போக்கள் கலை, கலாச்சாரம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் நமது அறிவை மேம்படுத்த முயற்சிக்கும் ஒரு கருப்பொருளை (தீம்) மையமாக கொண்டு உலகெங்கிலும் பல நாடுகளில் ஏற்பாடு செய்யப்பட்டு வெற்றிகரமாக நிறைவடைந்தது.

ஒரு உலக எக்ஸ்போவிற்கும் அடுத்த எக்ஸ்போவிற்கும் உள்ள இடைவெளி எவ்வளவு?

எக்ஸ்போ என்பது ஐந்து வருடங்களுக்கு ஒருமுறை மட்டுமே நடக்கும். அவ்வாறு நடைபெறும் ஒவ்வொரு எக்ஸ்போவும் 6 மாதங்களுக்கு இருக்கும்.

உலக எக்ஸ்போவை தேர்வு செய்ய ஏதேனும் அமைப்பு உள்ளதா?

ஆம். 1928 இல் நிறுவப்பட்ட பியூரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் The Bureau International des Expositions (BIE) என்பது உலக எக்ஸ்போக்களை ஒழுங்குபடுத்தும் மற்றும் மேற்பார்வை செய்யும் ஒரு அமைப்பு ஆகும். அதன் 170 உறுப்பு நாடுகளின் சார்பாக கல்வி, புதுமை மற்றும் ஒத்துழைப்பின் முக்கிய மதிப்புகளை இந்த அமைப்பு பாதுகாக்கிறது.

கடைசி எக்ஸ்போ எங்கே நடந்தது?

கடைசி எக்ஸ்போ 2015-ல் மிலனில் நடந்தது. அதன் கருப்பொருள்(தீம்) கிரகத்திற்கு உணவளித்தல், வாழ்க்கைக்கான ஆற்றல்என்பதாகும். இது ஊட்டச்சத்து மற்றும் உணவில் கவனம் செலுத்தியது. இந்த எக்ஸ்போ மிலனில் நடந்த இரண்டாவது கண்காட்சியாகும். முதல் முறையாக 1906-ல் நடந்தது குறிப்பிடத்தக்கது.

எக்ஸ்போவை துபாய் எப்போது வென்றது?

நவம்பர் 27, 2013 அன்று, பியூரோ இன்டர்நேஷனல் டெஸ் எக்ஸ்போசிஷன்ஸ் (BIE) 154 வது பொதுச் சபையின் போது, ஐக்கிய அரபு அமீரகம் உலக எக்ஸ்போ 2020-ஐ தொகுத்து வழங்கும் நாடாக தேர்ந்தெடுக்கப்பட்டது. மொத்தம் 164 நாட்டை சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்தார்கள். அதில் துபாய் 116 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று, அதன் போட்டியாளரான ரஷ்யாவின் யெகாடெரின்பர்க்கை 47 புள்ளிகளுக்கு பின் தள்ளியது.

உலக எக்ஸ்போக்கள் கடந்த காலத்தில் நமக்கு என்ன கொடுத்தது?

பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரம் (Eiffel Tower), சியாட்டில் விண்வெளி ஊசி (the Seattle Space Needle), தட்டச்சுப்பொறி (the typewriter), தொலைக்காட்சி மற்றும் ஹெய்ன்ஸ் தக்காளி கெட்ச்அப் (Heinz Tomato Ketchup) ஆகியவை உலக எக்ஸ்போக்கள் நமக்கு அளித்த சில விஷயங்கள் ஆகும்.

எக்ஸ்போ 2020 துபாயிலும் ஒரு தீம் இருக்கிறதா?

ஆம். ஒவ்வொரு எக்ஸ்போவும் மனித முன்னேற்றத்தின் பாதையில் நீடித்த தாக்கத்தை ஏற்படுத்த அதன் சொந்த கருப்பொருளை மையமாக கொண்டே நிகழும். எக்ஸ்போ 2020 துபாயின் தீம் ‘மனதை இணைத்தல், எதிர்காலத்தை உருவாக்குதல்’ ‘CONNECTING MINDS, CREATING THE FUTURE’ என்ற கருப்பொருளை கொண்டே இயங்கவுள்ளது.

எக்ஸ்போ 2020 துபாயின் சின்னம் என்ன?

Expo 2020 Dubai Logo

மார்ச் 2016-ல், எக்ஸ்போ 2020 துபாய் தனது புதிய லோகோவை வெளியிட்டது. இது சாரூக் அல் ஹதீத் தொல்பொருள் தளத்தில் (The Saroug Al Hadeed archaeological site) காணப்பட்ட ஒரு மோதிரத்தால் ஈர்க்கப்பட்டது ஆகும்.

எக்ஸ்போ 2020-ல் எத்தனை பேர் கலந்து கொள்வார்கள்?

ஆறு மாதங்களுக்கும் மேலாக 200-க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், 192 நாடுகள் மற்றும் மில்லியன் கணக்கான பார்வையாளர்கள் உட்பட எக்ஸ்போ 2020-ல் கலந்து கொள்வார்கள்.

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு ஒரு பெவிலியன் இருக்குமா?

ஆம், ஐக்கிய அரபு அமீரகம் அதன் சொந்த பெவிலியன் கொண்டிருக்கும். ஒரு பறக்கும் ஃபால்கான் பறவையின் சிறகு வடிவத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள, மொத்தம் 15,000 சதுர மீட்டருக்கும் அதிகமான பரப்பளவு கொண்ட நான்கு தளங்களைக்கொண்ட மிகப்பெரும் பெவிலியனான ஐக்கிய அரபு அமீரகத்தின் பெவிலியனின் திகழும். இது சாண்டியாகோ கலட்ராவாவால் வடிவமைக்கப்பட்டுள்ளது.

Expo 2020 Dubai Falcon Pavilion

எக்ஸ்போ 2020 துபாயின் துணை தீம்கள் யாவை?

வாய்ப்பு, இயக்கம் மற்றும் நிலைத்தன்மை.

தனிநபர்களுக்கும் சமூகங்களுக்கும் எதிர்காலத்தை வடிவமைப்பதற்கான வாய்ப்பு.

இயக்கம் என்பது பொருள் ரீதியாகவும் இணையம் வழியாக, மக்கள் சிறந்த மற்றும் அதிக உற்பத்தி இயக்கத்தை உருவாக்குவதாகும்.

நிலைத்தன்மை என்பது நாம் வாழும் உலகத்துடன் இயற்கையை மதித்து சமநிலையுடன் வாழ்வதும் ஆகும்.

எக்ஸ்போ தள தோற்றம் எப்படி இருக்கும்? அதன் முக்கிய இடம் என்னவாக இருக்கும்?

எக்ஸ்போ 2020 தளத்தின் மையத்தில் அல் வாஸ்ல் பிளாசா (Al Wasl Plaza) இருக்கும். ஆறு மாதங்கள் நடக்கும் இந்த கொண்டாட்டங்களுக்கு இதுவே மையப் புள்ளியாக அமையும்.

Al Wasl Plaza

முன்னதாக வரலாற்று ரீதியாக, துபாய் அல் வாஸ்ல் அல்லது “இணைப்பு” என்று அழைக்கப்பட்டது. ஏனெனில், இது உலக மக்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் ஒரு இடமாக போற்றப்படுகிறது. ஆகவே அதன் பெயரிலேயே ஒரு பொழுதுபோக்கு தளம் மையமாக விளங்கும். அங்கேதான் எக்ஸ்போ 2020 துபாயின் பார்வையாளர்கள் 192 நாடுகளின் கொண்டாட்டங்கள் மற்றும் கலாச்சார நிகழ்வுகளை அனுபவிப்பார்கள்.

எக்ஸ்போ 2020 துபாயில் ஒருவர் என்ன செய்ய முடியும்?

எக்ஸ்போ 2020 துபாயில் உங்களை மகிழ்விக்கவும், திகைக்க வைக்கவும் ஏற்ப பல அதிசயங்கள் காத்துக்கொண்டிருக்கிறது. கலை, இசை, காஸ்ட்ரோனமி முதல் தொழில்நுட்பம், கட்டிடக்கலை மற்றும் பொழுதுபோக்கு வரை, அரபு உலகில் இதுவரை நடந்த மிகப்பெரிய நிகழ்வின் மந்திரத்தை நீங்கள் அனுபவிக்க ஒரு நாள் போதாது.

அல் வாஸ்ல் பிளாசாவில் உங்கள் நாளைத் தொடங்குங்கள். அங்கு உள்ளூர் மற்றும் உலகளாவிய திறமையாளர்களிடமிருந்து கலைப்படைப்பு மற்றும் திறன்களை காணலாம். மேலும் புதுமையான மற்றும் நிலையான வடிவமைப்புகளில் கட்டப்பட்ட பெவிலியன்களில் நீங்கள் ஒரு கட்டடக்கலை சாகசத்தையும் ஆச்சரியத்தையும் காணலாம்.

நீங்கள் 192 வெவ்வேறு நாடுகளுக்குச் சென்று அவர்களின் வரலாறு மற்றும் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்து கொள்ளும் ஒரு பயணத்தைத் தொடங்குவதை கற்பனை செய்து பார்க்கவே புல்லரிக்கும் அனுபவமாக உங்களுக்கு அமையும் .

ஒவ்வொரு நாளும் 60 க்கும் மேற்பட்ட நேரடி நிகழ்ச்சிகள் நடைபெறும். எனவே ஓபராக்கள் முதல் பாப்-அப் தியேட்டர்கள் வரை, ஃபிளாஷ் கும்பல்கள், விளையாட்டு நிகழ்வுகள் மற்றும் தேசிய தின கொண்டாட்டங்கள் வரை அனைத்தும் நீங்கள் மீண்டும் மீண்டும் வருவதற்கு போதுமானதாக இருக்கும்.

அதுமட்டுமின்றி தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு தன்னாட்சி வாகனங்கள், ரோபாட்டிக்ஸ், ஆக்மெண்டெட் ரியாலிட்டி மற்றும் விண்வெளி ஆய்வு ஆகியவற்றுடன் உண்மையிலேயே இணைக்கப்பட்ட உலகத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.

எக்ஸ்போ 2020-ல் ஒருவர் என்ன சாப்பிட முடியும்?

இந்த உலக கண்காட்சியில் பங்குபெறும் 192 நாட்டின் கலாச்சார உணவுகளை பார்வையாளர்கள் தன் விருப்படி ருசித்து சாப்பிடுவதற்கு ஏற்ப 200-க்கும் மேற்பட்ட உணவகங்கள் அமைந்திருக்கும்.

எக்ஸ்போ 2020 தளத்தில் குடிநீர் எளிதில் கிடைக்குமா?

ஆம், எக்ஸ்போ தளத்தில் 45 நீர் நீரூற்றுகள் (சபீல்ஸ் என்றும் அழைக்கப்படுகின்றன) இருக்கும். அங்கு பார்வையாளர்கள் குடிநீரை அருந்தலாம்.

குழந்தைகள் எக்ஸ்போ 2020 தளத்தைப் பார்வையிட முடியுமா?

ஆம், குழந்தைகள் விளையாடக்கூடிய இரண்டு பூங்காக்கள் இங்கு உள்ளன – அல் ஃபோர்சன் மற்றும் ஜூபிலி ஆகும்.

எக்ஸ்போ 2020 க்கான டிக்கெட்டுகளை ஒருவர் எவ்வாறு வாங்குவது?

எக்ஸ்போ 2020 வலைத்தளத்தின் மூலமாகவும், அங்கீகரிக்கப்பட்ட டிக்கெட் மறுவிற்பனையாளர்களின் நெட்வொர்க் மூலமாகவும், எக்ஸ்போ 2020 உடன் ஒப்பந்தம் செய்யப்பட்ட நிறுவனங்கள் மூலமாகவும் மற்றும் நிகழ்வின் போது எக்ஸ்போ 2020 வாயில்களிலும் நீங்கள் டிக்கெட்டுகளை வாங்க முடியும்.

ஏப்ரல் 2020-ல் டிக்கெட்டுகள் பொது மக்களுக்கு விற்பனைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எக்ஸ்போ 2020-ன் டிக்கெட் விலை என்ன?

18 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவருக்கு ஒரு நாள் டிக்கெட் 120 திர்ஹம்ஸ் ஆகும். அதே நேரத்தில் எக்ஸ்போவின் 173 நாட்களில் எந்த மூன்று நாட்களிலும் பயன்படுத்தக்கூடிய மூன்று நாள் பாஸ் விலை 260 திர்ஹம்ஸ் ஆகும்.

ஒரு நாளைக்கு 60 நேரடி நிகழ்ச்சிகள், எதிர்காலத்தை வடிவமைக்கும் தொழில்நுட்பங்கள், உலகப் புகழ்பெற்ற கலைஞர்களின் நிகழ்ச்சிகள், தினசரி அணிவகுப்புகள், அதிநவீன கட்டிடக்கலை, சிறப்பு கொண்டாட்டங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட உணவகங்கள் உள்ளிட்ட வாழ்நாளில் கிடைக்கும் ஒரு முறை அனுபவத்தை உங்கள் டிக்கெட் உங்களுக்கு வழங்கும்.

குழந்தைகள் மற்றும் மூத்த குடிமக்கள் இலவசமாக அனுமதிக்கப்படுகிறார்களா?

ஐந்து வயது மற்றும் அதற்கு உட்பட்ட குழந்தைகளுக்கும், 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதினருக்கும் இலவச அனுமதி உண்டு.

எக்ஸ்போவின் ஆறு மாதங்களுக்குப் பிறகு என்ன நடக்கும்?

எக்ஸ்போ 2020 துபாயின் உள்கட்டமைப்பில் 80 சதவீதத்திற்கும் அதிகமானவை District 2020-ன் ஒரு பகுதியாக எதிர்காலத்திலும் செயல்பட்டு கொண்டிருக்கும். எடுத்துக்காட்டாக, அல் வாஸ்ல் பிளாசா எக்ஸ்போவிற்கு பிறகும் நடைமுறையில் இருக்கும். மேலும் நிலைத்தன்மையை மையமாக கொண்டுள்ள பெவிலியன் டெர்ரா, குழந்தைகள் மற்றும் அறிவியல் மையமாக மாறும். இயக்கம் என்பதை தீமாக கொண்டிருக்கும் பெவிலியன் ஒரு வணிக கட்டிடமாக மாறும். ஐக்கிய அரபு அமீரக பெவிலியன் இருக்கும் இடம் அமீரக அரசாங்கத்தால் நிர்வகிக்கப்படும்.

எக்ஸ்போ 2020 துபாய் முடிவடைந்ததற்கு பின் “District 2020” என்கிற பெயரில் வருங்காலங்களிலும் இயக்கப்படுவுள்ள இந்த இடம் எதிர்கால நகரமாகவும், கண்டுபிடிப்பாளர்கள், குடும்பங்கள், கலைஞர்கள் மற்றும் முன்னோடிகளுக்கான வீடாகவும் உருவெடுக்கும் என்றும் கூறப்படுகிறது.