UAE Tamil Web

அமீரக தேசிய தினம் கொண்டாடப்படுவதன் வரலாறு இதுதான்..!

Copy_of_UAE_National_Day_at_Dubai_Festival_City_2018_1_16a08526539_original-ratio

உலகில் நாடு என ஒன்று இருந்தால் அது தமக்கு சேவகம் புரியவே இருத்தல் வேண்டும் என ஐக்கிய ராஜ்ஜியம் வரிந்துகட்டிக்கொண்டு வேலை பார்த்துக்கொண்டிருந்த நேரம். உலக உருண்டையில் எங்கே உங்களது ஆள் காட்டி விரலை வைத்தாலும் சர்வ நிச்சயமாக ஆங்கிலேயே அரசின் ஆதிக்கம் அப்போது அங்கே இருந்தது எனச் சொல்லிவிடலாம். அப்படியான காலகட்டம்.

அடுத்தடுத்து நடைபெற்ற இரண்டு உலக யுத்தங்கள் பிரிட்டனின் ஆதிக்க வெறிக்கு வேட்டு வைத்தன என்றே சொல்லவேண்டும். இரண்டாம் உலக யுத்தம் முடிந்தபிறகு “நம்ம நாதஸ் திருந்திட்டான்” எனச் சொல்லுமளவிற்கு உலகெங்கிலும் இருந்த தங்களது படைகளை ஆங்கிலேயே அரசு வாபஸ் வாங்கும் படலத்தை ஆரம்பித்துவைத்தது.

மத்திய கிழக்கிலும் பிரிட்டன் தங்களது பெட்டி படுக்கையைக் கட்டியது. கொஞ்சம் லேட் தான். 1968 ஆம் ஆண்டு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகளில் இருந்து வீரர்களை திரும்பப் பெற்றது பிரிட்டன். ஒரு நிமிடம். அப்போது அமீரகம் எல்லாம் இல்லை. எல்லாம் தனித்தனி எமிரேட்கள். தனித்தனி ராஜ்ஜியங்கள். தனித்தனி ஆட்சியாளர்கள். இப்படி எல்லாமே தனித்தனி.

நிலப்பரப்பின் அடிப்படையில் பார்க்கும்போது மேற்குலக நாடுகளை விட இந்த எமிரேட்கள் மிகவும் சிறியவை. இன்றைக்கு பிரிட்டன். இனிமேல் இப்படி பிரிந்திருந்தால் நாளை வேறு ஒரு நாடு. இந்த அடிமைப் படலம் என்றும் தொடரும் என நினைத்தார்கள் அப்போதைய ஆட்சியாளர்கள்.

இவர்களில் முக்கியமானவர்கள் ஷேக் சயீத் சுல்தான் அல் நஹ்யான் மற்றும் ஷேக் ரஷீத் சயீத் அல் மக்தூம். அனைத்து எமிரேட்களும் ஒன்றாக இருப்பதே அதன் வளர்ச்சிக்கு முக்கியம் என்பதில் தீர்க்கமாக இருந்தார்கள் இருவரும்.

1968 துவங்கி பல்வேறு பேச்சுவார்த்தைகள், ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெற்றன. அனைத்தும் அமீரகம் என்னும் நாடு உருவாக்கம் பற்றியவையே. இறுதியில் 1971 ஆம் ஆண்டு டிசம்பர் 1 ஆம் தேதி, எமிரேட்ஸ் பெடரல் சட்டத்துறை அனைத்து எமிரேட்களும் ஒன்றினையும் தீர்மானத்தை முன்மொழிந்தது.

அதற்கு அடுத்தநாள் அதாவது டிசம்பர் 2 ஆம் தேதி, அந்தந்த எமிரேட்களின் ஆட்சியாளர்கள் அனைவரின் முன்னிலையில் துபாயின் ஜூமெய்ரா அரண்மனையில் அமீரக தேசியக்கொடி ஏற்றப்பட்டது. அந்த நாளே அமீரக தேசிய தினம் என்றழைக்கப்படுகிறது.

அமீரக தேசியக்கொடி முதன்முதலில் பட்டொளி வீசிப் பறந்த தினத்தில் மொத்தம் 6 எமிரேட்கள் தான் இருந்தன. ஆம். 6 எமிரேட்தான் அப்போது. அமீரகம் உருவான பின்னரே அதாவது 1972 பிப்ரவரியில் தான் ராஸ் அல் கைமா புதிய எமிரேட்டாக சேர்த்துக்கொள்ளப்பட்டது.

கொடி தேர்ந்தெடுக்கப்பட்ட வரலாறு

அமீரக தேசியக்கொடியை உருவாக்க நாடு தழுவிய அளவில் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. 1,030 க்கும் மேற்பட்ட கொடிகள் போட்டியின்போது சமர்ப்பிக்கப்பட்டன. அதிலிருந்து 6 கொடிகள் இறுதிச் சுற்றுக்கு தகுதியாகி, பின்னர் அதிலிருந்து ஒரு கொடி தேர்ந்தெடுக்கப்பட்டது. அதுவே தற்போதைய அமீரக கொடியாகும்.

ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 ஆம் தேதி அமீரக கொடி தினம் கொண்டாடப்படுகிறது. அமீரகத்தின் அடையாளத்தை பறைசாற்றவும் ஒற்றுமையை வலியுறுத்தும் நோக்கோடும் 2013 ஆம் ஆண்டிலிருந்து இந்நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

இதனை உருவாக்கியவர் அப்துல்லா முகமது அல் மாய்னாஹ் என்னும் அமீரக குடிமகனாவார்.

வர்ணங்கள் சொல்லும் கதை

அமீரக கொடியில் மொத்தம் நான்கு நிறங்கள் இடம்பெற்றுள்ளன. இவ்வண்ணங்கள் உணர்த்தும் செய்தி குறித்து கீழே காணலாம்.

பச்சை

வளர்ச்சி, செழுமை, முன்னேற்றம், அற்புதங்கள், நீடித்த வளர்ச்சி மற்றும் முன்னேற்றம்.

வெள்ளை 

நற்செயல், ஈகை மற்றும் பெருந்தன்மை, சாதனைக்கான முயற்சி மற்றும் அமைதியை பரவச்செய்தல்.

கறுப்பு

அதிகாரம், வலிமை மற்றும் துயரிலிருந்து மீண்டெழுதல்.

சிவப்பு

அமீரகத்தின் புதல்வர்களின் தியாகம், அவர்களுடைய பெருமைவாய்ந்த வீரம், தியாகம் நிறைந்த அவர்களுடைய இரத்தம்.

– ஆகியவற்றின் அடையாளமாகவே அமீரக தேசியக்கொடியில் மேற்கண்ட வண்ணங்கள் இடம்பெற்றுள்ளன.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap