fbpx
UAE Tamil Web

அமீரகத்திற்கு உங்களது குடும்பத்தினை Family Visa வில் அழைத்துவர ஆன்லைன் மூலமாக விண்ணப்பிப்பது எப்படி? – தெளிவான விளக்கங்கள் உள்ளே..!

visa

வேலைக்காக அமீரகம் வந்தவர்களில் பெரும்பாலான இந்தியர்களின் எதிர்பார்ப்பு அவர்களுக்கு அவர்களது நிறுவனம் தரும் விடுமுறை தான். வருடக்கணக்கில் குடும்பத்தினரைப் பிரிந்து, சொந்த பந்தங்களை மறந்து குளிரிலும் மழையிலும் கொளுத்தும் வெயிலிலும் கஷ்டப்படும் ஒவ்வொருவருக்கும் தங்களது குடும்பத்தையும் அமீரகத்திற்கு அழைத்துவர வேண்டும் எனத் தோன்றியிருக்கும்.

இருப்பினும் குடும்பத்தினருக்கான விசாவிற்கு (Family Visa) எப்படி விண்ணப்பிப்பது? என்னென்ன வழிமுறைகள்? எவ்வளவு செலவாகும்? என உங்களிடம் இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் கீழே பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ICA வின் இணையதளம் மற்றும் ICA அப்ளிகேஷன் மூலமாக அமீரக குடியிருப்பாளர் எவ்வாறு தங்களது குடும்பத்தினருக்கு நுழைவு அனுமதி பெறுவது என ICA தனது சமூக வலைத்தங்களில் வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அவற்றை விலாவாரியாக பார்ப்போம்.

ஆன்லைன் பதிவு

  • ICA வின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.ica.gov.ae ற்குள் செல்ல வேண்டும் அல்லது ICA  வின் அப்ளிகேஷனை தரவிறக்கிக்கொள்ளுங்கள்.
  • உங்களுடைய பெயர் மற்றும் உங்களுக்கான பாஸ்வேர்ட் கொடுத்து பதிவு செய்யுங்கள்
  • UAE Pass வைத்திருப்பவர்கள் அதனையும் பயன்படுத்தலாம்.

ஸ்பான்சர் கோப்பு பதிவு

நீங்கள் உங்களுடைய குடும்பத்தை அமீரகத்திற்கு அழைத்துவருவதால் நீங்கள் ஸ்பான்சர் ஆகிறீர்கள். ஆகவே உங்களுக்கான ஸ்பான்சர் கோப்பு ஒன்றினை பதிவு செய்தல் கட்டாயம்.

தேவைப்படும் ஆவணங்கள் 

  • உங்களுடைய (ஸ்பான்சர்) விசா நகல் மற்றும் விசா பக்கம்.
  • உங்களுடைய எமிரேட்ஸ் ஐடி நகல்.
  • வருமான சான்றிதழ் (நீங்கள் அரசுத் துறையிலோ அல்லது ஃ ப்ரீ சோனிலோ பணிபுரிபவராக இருந்தால்) அல்லது தொழிலாளர் ஒப்பந்த படிவம் (Labour Contract) (நீங்கள் தனியார்துறையில் பணிபுரிபவராக இருந்தால்)
  • உங்களுடைய கோப்பை பதிவு செய்ய 255 திர்ஹம்ஸ் செலவாகும்.
  • ஆவணங்கள் அனைத்தும் வண்ண நகலுடன் (Colored Copy) PDF அல்லது JPG வடிவமைப்பில் இருத்தல் வேண்டும்.

நுழைவு அனுமதிக்கு விண்ணப்பித்தல்

Residence Permit Issuance Service என்பதனைக் கிளிக் செய்த பின்னர் கீழ்கண்ட ஆவணங்களை உள்ளீடு செய்யவும்.

  • உங்களுடைய (ஸ்பான்சர்) விசா நகல் மற்றும் விசா பக்கம்.
  • உங்களுடைய எமிரேட்ஸ் ஐடி நகல்.
  • வருமான சான்றிதழ் அல்லது தொழிலாளர் ஒப்பந்த படிவம்.
  • சான்றளிக்கப்பட்ட (Attested) தகுந்த மொழிபெயர்ப்புடன் கூடிய திருமணச் சான்றிதழ்.
  • சான்றளிக்கப்பட்ட (Attested) தகுந்த மொழிபெயர்ப்புடன் கூடிய பிறப்புச் சான்றிதழ்.
  • இஜாரி (Ejari) நகல் அல்லது குத்தகை ஒப்பந்தப் படிவம்.
  • உங்களது குடும்பத்தினரின் பாஸ்போர்ட் நகல்
  • உங்களது குடும்பத்தினரின் வெள்ளை நிறப் பின்புலத்தில் எடுக்கப்பட்ட புகைப்படம்.

மேற்கண்டவற்றை உள்ளீடு செய்து சமர்ப்பித்தால், மின்னஞ்சல் மூலமாக உங்களுக்கு நுழைவு அனுமதி அனுப்பப்படும். இதற்காக 306 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படும்.

நிலையை மாற்றுதல்

அடுத்ததாக விசா நிலையை மாற்ற நீங்கள் அனுமதிகோர வேண்டும். அதற்கு கீழ்கண்ட விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். அதாவது சுற்றுலா விசாவில் நீங்கள் உங்களுடைய குடும்பத்தினரை அமீரகம் அழைத்து வந்தால் விசாவின் நிலையை மாற்றவேண்டும்.

  • தற்போதைய சுற்றுலா விசா நகல் அல்லது ரத்து செய்ய ஒப்புதல் அளித்ததற்கான கடிதம்.
  • புதிய நுழைவு அனுமதி நகல்.
  • இதற்கு 559 திர்ஹம்ஸ் செலவாகும்.

எமிரேட்ஸ் ஐடி

மேற்கண்ட படிநிலைகளைக் கடந்தவுடன், மருத்துவ உடற்தகுதி சான்றிதழ் (18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டும்), எமிரேட்ஸ் ஐடி மற்றும் சுகாதாரக் காப்பீடு ஆகியவற்றிற்கு விண்ணப்பிக்கவேண்டும். அபுதாபி மற்றும் துபாய் விசா வைத்திருப்பவர்களுக்கு இது அவசியம்.

விசாவில் ஸ்டாம்ப் செய்தல்

அடுத்தகட்டமாக உங்களுடைய விசாவில் ஸ்டாம்ப் பெற அனுமதி கோரி விண்ணப்பிப்பது. இதற்கும் நீங்கள் கீழ்கண்ட சான்றிதழ்களை உள்ளீடு செய்யவேண்டும்.

  • நுழைவு அனுமதி நகல்
  • நிலையை மாற்றியதற்கான நகல் (உங்களுடைய உறவினர் அமீரகத்திற்குள் இருப்பாராயின்)
  • ஸ்பான்சரின் விசா நகல் மற்றும் விசா பக்கம்.
  • இஜாரி (Ejari) நகல் அல்லது குத்தகை ஒப்பந்தப் படிவம்.
  • திருமண சான்றிதழ் நகல் (இரு நாட்டிலும் சான்றிளிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்)
  • தகுந்த மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட திருமணச் சான்றிதழின் நகல்.
  • பிறப்புச் சான்றிதழின் நகல்.
  • தகுந்த மொழிபெயர்ப்பு செய்யப்பட்ட பிறப்புச் சான்றிதழின் நகல்.
  • விண்ணப்பதாரரின் பாஸ்போர்ட் நகல்.
  • வெள்ளை நிற பின்புலத்தில் எடுக்கப்பட்ட ஒரு புகைப்படம்.
  • விசா ஸ்டாம்ப் செய்ய அரசு விதித்திருக்கும் கட்டணம் 458 திர்ஹம்ஸ்.

உடனடியாக ஸ்டாம்ப் பெற விரும்புவோர் குடியேற்றத்துறைக்குச் சென்று அங்கேயே ஸ்டாம்ப் பெற்றுக்கொள்ளலாம். அதற்கு கூடுதலாக 100 திர்ஹம்ஸ் செலுத்தவேண்டிவரும்.