UAE Tamil Web

ரமலான் நோன்பு காலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பானதா? மருத்துவர்கள் கூறுவது என்ன?

Corona Vaccine

அமீரகத்தில் ஒருபுறம் கொரோனா பாதிப்புகள் அதிகமாகி வரும் வேளையில் ரமலான் நோன்பும் துவங்க இருப்பதால் நோன்பின் போது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாமா? என பலரும் தங்களது அச்சங்களை வெளிப்படுத்திவந்தனர். இந்நிலையில் அதற்கு அமீரக மருத்துவர்கள் பதிலளித்துள்ளனர்.

- Advertisment -

ரமலான் காலத்தில் கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வது பாதுகாப்பானது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

துபாய் இஸ்லாமிய விவகாரங்கள் மற்றும் தொண்டு நடவடிக்கைகள் துறையின் ஃபத்வா பிரிவுத் தலைவர் ஷேக் டாக்டர் அகமது பின் அப்துல் அஜீஸ் அல் ஹதாத் கடந்தவாரம் ஃபத்வா ஒன்றினை வெளியிட்டார். அதன்படி ரமலான் நோன்பானது கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்வதால் எவ்விதத்திலும் பாதிக்கப்படாது என ஹதாத் தெரிவித்திருந்தார்.

“நோன்பு இருப்பவர்கள் வாய், மூக்கு மற்றும் நரம்புகள் வாயிலாக உணவு, நீர் மற்றும் மருந்துகளை எடுத்துக்கொள்தல் கூடாது. ஆனால் கொரோனா தடுப்பூசியானது தசைநார்களுக்கு இடையே போடப்படுவதால் நோன்பு பாதிக்காது. ஆகவே அனைவரும் ரமலான் நோன்பின்போதும் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்” என ஹதாத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து மருத்துவர்களிடம் கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர்கள் அளித்த பதில்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

ஃபகீ யூனிவெர்சிட்டி மருத்துவமனையின் (Fakeeh University Hospital) ஆய்வக தலைவர் டாக்டர் பாலட் மேனன்,” நோன்பு காலத்தில் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ள நான் அனைவரையும் ஊக்கப்படுத்துகிறேன். முதலாவதாக பக்கவிளைவுகள் குறித்த பயத்தினால் ஒருவர் தடுப்பூசி போடாமல் இருத்தல் கூடாது. இரண்டாவதாக நோயெதிர்ப்பு சக்தியானது சாதாரண நாட்களைவிட நோன்பு இருத்தலின்போது இரண்டு மடங்காக இருக்கும். மருத்துவ அல்லது மத நம்பிக்கையின் அடிப்படையில் ஒருவர் 12 மணிநேரம் நோன்பு இருந்தால் அவரது நோயெதிர்ப்பு அமைப்பில் உள்ள மேக்ரோபேஜஸ் துரிதமாக வேலைசெய்யும். இதனால் கழிவு, உடைந்த, இறந்த செல்கள் மற்றும் நச்சுப்பொருட்கள் உடனடியாக வெளியேற்றப்படும். இந்த செயல்முறையானது ஆட்டோபாஜி (autophagy) என்றழைக்கப்படுகிறது. இந்தக் காலகட்டத்தில் நோயெதிர்ப்பு மண்டலமானது நன்றாக வேலைசெய்யும்”

“சர்க்கரை, ஆஸ்துமா போன்ற வளர்சிதை மாற்றக் குறைபாடுகளினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த இடைப்பட்ட நோன்பானது நல்ல பலன்களைக் கொடுக்கும். ஆகவே, நோன்பு காலத்தில் தாராளமாக ஒருவர் கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம்” என்றார்.

இஃப்தாருக்கு முன்னர் எடுத்துக்கொள்ளுங்கள்

மேடோர் மருத்துவமனை ஆய்வகத்தின் நோயியல் பிரிவு நிபுணர் டாக்டர். குஞ்சன் மகாஜன் இதுகுறித்துப் பேசுகையில்,” நோன்பு இருப்பதால் ஒருவர் தனது கொரோனா தடுப்பூசியின் முதல் மற்றும் இரண்டாவது டோசைப் பெறும் நேரத்தை மாற்றியமைக்க வேண்டிய கட்டாயமில்லை. பொதுவாக கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்பவர்களுக்கு ஊசி செலுத்திய இடத்தில் புண், தலைவலி மற்றும் தலை சுற்றல் போன்ற பக்க விளைவுகள் ஏற்படலாம். அதுவும் தடுப்பூசி எடுத்துக்கொண்ட அடுத்தநாள் தான் இவை ஏற்படுகின்றன. ஆகவே, நோன்பு காலத்திலும் ஒருவர் தடுப்பூசி எடுத்துக்கொள்ளலாம் என நான் அனைவரிடத்தும் பரிந்துரைக்கிறேன்”

“நாம் நோன்பில் இருந்தால்கூட நமது உடம்பு வைரஸ்களை எதிர்த்துப் போராடும் திறன்கொண்டது. ஏனெனில் நாம் ஓய்வெடுத்தாலோ அல்லது வேலை செய்தாலோ, நோன்பு இருந்தாலோ அல்லது வழக்கம் போல இருந்தாலோ நமது உடம்பில் அனபாலிக், கேடபாலிக் அல்லது வளர்சிதை மாற்றங்கள் தொடர்ந்து நடைபெறவே செய்யும். மேலும் நோன்பின் போது நோயெதிர்ப்பு மண்டலமானது ஆற்றலுடன் இயங்கவல்லது”

“பக்கவிளைவுகள் குறித்து உங்களுக்குப் பயம் இருந்தால் இஃப்தாருக்கு முன்னர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள். இதனால் ஓய்வும் அடுத்த நாளுக்குத் தேவையான ஆற்றலையும் பெற முடியும். சிலர் காலை சுஹூருக்குப் பின்னர் தடுப்பூசி எடுத்துக்கொள்கிறார்கள். சிலர் இஃப்தாருக்குப் பின்னர். ஒவ்வொருவரின் உடல்நிலையும் வெவ்வேறானவை. ஆகவே உங்களுக்கு வசதியான நேரத்தில் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளுங்கள். ஒரு மருத்துவராக நான் சொல்வதெல்லாம் நோன்பு இருக்கும் போது தாராளமாக கொரோனா தடுப்பூசியை எடுத்துக்கொள்ளலாம் என்பதைத்தான்” என்றார்.