ராஸ் அல் கைமா அரச குடும்பத்தைச் சேர்ந்த மறைந்த ஷேக் அப்துல் அஜீஸ் பின் ஹுமைத் அல் காசிமி (Sheikh Abdulaziz bin Humaid Al Qasimi) தனது குடும்பத்தினருக்காக கட்டிய பிரம்மாண்ட மாளிகை தான் இந்த காசிமி பேலஸ். 1985 ஆம் ஆண்டே இந்த மாளிகையை கட்டிமுடிக்க 500 மில்லியன் திர்ஹம்ஸ் செலவாகியிருக்கிறது.
35 அறைகள், அசத்தலான மொரோக்கா டைல்ஸ்கள், கண்ணைக் கவரும் சுவரோவியங்கள், அழகிய வேலைப்பாடுகளுடன் கூடிய கலைப் பொருட்கள் என காண்போரைத் திக்குமுக்காடச் செய்யும் இந்த மாளிகைக்கு பேய்களின் மாளிகை என்னும் பெயரும் உண்டு.

பிரம்மாண்டமாக எழுந்து நிற்கும் இந்த மாளிகைக்கு ஏன் இப்படியொரு பெயர்? எனக் கேட்கத் தோன்றுகிறதல்லவா? காரணம் இருக்கிறது. அப்துல் அஜீஸ் குடும்பம் இந்த மாளிகையில் குறைவான காலத்திற்கே வசித்திருக்கிறது. அதன்பின்னர் அரச குடும்பம் வேறு மாளிகைக்குச் சென்றுவிட்டது.
அரச குடும்பம் இந்த மாளிகையை விட்டு வெளியேறிய பின்னர், அந்த மாளிகை பற்றி பல கதைகள் பரவத் தொடங்கின. அதில் ஒன்று, இரவு நேரங்களில் மாளிகையில் உள்ள பொருட்கள் தாமாகவே கீழே விழுந்து நொறுங்குவது. இதை பலரும் கண்மூடித்தனமாக நம்பியிருக்கிறார்கள் அல்லது நம்புகிறார்கள். திடீரெனக் கேட்கும் குழந்தைகளின் அலறல் சப்தம், இருளில் தோன்றி மறையும் முகங்கள் என அடுக்கடுக்கான செய்திகள் வெளிவரத் துவங்கின. மாளிகையும் அடுத்த 30 ஆண்டுகளுக்குப் பூட்டப்பட்டது.

மாளிகை பயன்படுத்தப்படாமல் விடப்பட்டதற்கு காரணம் என்ன? என எந்த அறிவிப்பும் வெளிவரவில்லை. ஆகவே, பொதுமக்களே தங்களுடைய கற்பனை சக்திக்குத் தகுந்தபடி புதிய காரணங்களை உருவாக்கிக்கொண்டனர். இந்தக் கதைகளில் மிகவும் ஆர்வம் கொண்ட தாரிக் அல் ஷர்ஹான் என்னும் தொழிலதிபர் 2019 ஆம் ஆண்டு இந்த மாளிகையை வாங்கினார்.
ஆறு மாதங்களுக்கு புனரமைப்புப் பணிகள் நடைபெற்றன. மாளிகையின் உள்ளே இருந்த பல்வேறு தலையில்லாத சிலைகள் (மாளிகைக்குள் இப்படி தலையில்லாத பறவைகள் மற்றும் விலங்குகளின் சிலைகள் இருந்திருக்கின்றன) சீரமைக்கும் பணிகளுக்கென கலைஞர்கள் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டனர்.

புனரமைப்புப் பணிகள் நடைபெற்றுக்கொண்டிருந்த நேரத்தில் ஒருநாள் மதியம் உணவு இடைவெளியின் போது திடீரென பலத்த அலறல் சப்தம் கேட்டதாக இந்தியாவைச் சேர்ந்த தொழிலாளி ஒருவர் கூறியிருக்கிறார். எவ்வளவோ சமாதானம் செய்ய முயற்சித்தும், அவர் உடனடியாக வேலையை ராஜினாமா செய்துவிட்டு இந்தியாவிற்கே திரும்பச் சென்றுவிட்டதாகவும் புனரமைப்புக் குழுவில் இருந்தவர்கள் தெரிவிக்கிறார்கள். இப்படி மாளிகையின் மீதான மர்மத்தை ஏதேனும் ஒரு கோணத்தில் நீடிக்க அடுத்தடுத்து சம்பவங்கள் நடைபெறாமல் இருந்ததில்லை.
கண்ணுக்குப் புலப்படாத உயிரினமான ஜின்கள் தான் இத்தனைக்கும் காரணம் என சொல்பவர்களும் இருக்கிறார்கள்.
ஆனால் இதனை ஒரு மெல்லிய புன்னகையுடன் கடக்கிறார் இந்த மாளிகையின் தற்போதைய அதிபரான தாரிக்.” கைவிடப்பட்ட இடங்களில் தான் ஜின்கள் இருக்குமென்றால், தற்போது மக்கள் அதிகமாக இங்கு வருகிறார்கள். அப்படியென்றால் அவை மற்ற கைவிடப்பட்ட இடங்களுக்குச் சென்றிருக்க வேண்டுமல்லவா? நம் சிந்தனைக்குள் அத்தகையை எண்ணம் புகுந்துவிட்டால் நாம் காணும் அனைத்திலுமே அதன் தாக்கம் இருக்கும். இந்த மாளிகைக்குள் இருப்பது வரலாறு மட்டுமே” என்கிறார்.

ராஸ் அல் கைம்மாவின் மிக முக்கிய சுற்றுலா தளமான இந்த மாளிகைக்குள் செல்ல 2019 ஆம் ஆண்டு அனுமதி வழங்கப்பட்டது. உள்ளே செல்ல ஒரு நபருக்கு 75 திர்ஹம்ஸ் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. குழுவாகச் செல்ல விரும்புவோருக்கு ஒரு நபருக்கு 50 திர்ஹம்ஸ் கட்டணத்தில் டிக்கெட்கள் வழங்கப்படுகின்றன.
வாரத்தின் அனைத்து நாட்களிலும் காலை 9 மணிமுதல் இரவு 7 மணிவரையில் இங்கு செல்ல பார்வையாளர்களுக்கு அனுமதியானது வழங்கப்படுகிறது.
மாளிகைக்குள் கண்டிப்பாக புகைப்படம் எடுக்க அனுமதி கிடையாது. அதனை மீறி கலை ஆர்வம் பொங்கி போட்டாவை கிளிக் செய்தால் 200 திர்ஹம்ஸ் அபாரதம் செலுத்தவேண்டிவரும். அதேபோல, மாளிகைக்குள் இருக்கும் ஓவியங்கள் மற்றும் சிலைகளை சுரண்டிப் பார்ப்பதோ, தொட்டுப் பார்க்கவோ அனுமதி கிடையாது.
வாய்ப்பிருப்பவர்கள் ராஸ் அல் கைமாவில் அமைந்துள்ள இந்த அழகிய காசிமி மாளிகைக்கு சென்று வாருங்கள். நிச்சயம் நல்ல சுற்றுலாவாக அது அமையும்.
இதேபோல, ஷார்ஜாவில் உள்ள பேய்களின் நகரமான அல் மதாம் பற்றிய சுவாரஸ்யமான தகவல்களைத் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்.