MV ஹஃபீத் (MV Hafeet) தற்போதைய நிலையில் அமீரகத்தின் மிகப்பெரிய சரக்குக் கப்பல் இதுதான். 254 நீளமும், 49 மீட்டர் அகலமும் கொண்ட இந்த பிரம்மாண்ட கப்பலில் 101,648 டன் எடையுள்ள பொருட்களை எடுத்துச் செல்லமுடியும். கப்பலின் டீசல் எஞ்சின் 15,200 குதிரைத் திறன்களை உருவாக்கவல்லது. இந்தக் கப்பலில் 4 கிரேன்களும், 7 சரக்கு வைக்கும் இடங்களும் (cargo holds) இடம்பெற்றுள்ளன.
சஃபீன் (Safeen) நிறுவனத்தால் வாங்கப்பட்டிருக்கும் இந்த கப்பல் 2006 ஆம் ஆண்டு ரோமானியாவில் கட்டப்பட்டது. துவக்கத்தில் பனாமா கால்வாயில் இயக்கப்பட்டுவந்த இக்கப்பலை கடந்த மாதம் சஃபீன் குழுமம் வாங்கியிருக்கிறது. அதன்பின்னர் கிரேன்கள் மற்றும் கன்வேயர் பொருத்தும் பணிகள் உட்பட பல கட்டுமானப் பணிகளுக்கு கப்பலானது உட்படுத்தப்பட்டது.
அபுதாபி துறைமுகத்தில் நிலைபெறும் இந்த கப்பல், இரும்பு தாதுக்களை ஏற்றிவரும் சரக்குக் கப்பல்களில் இருந்து அவற்றை அமீரகதிற்குள் எடுத்துவரும் பணியை மேற்கொள்ள இருக்கிறது.
SAFEEN Group – the marine services arm of Abu Dhabi Ports – is proud to announce that M/V HAFEET, the latest addition to SAFEEN’s growing fleet, has been registered as the UAE’s largest ever bulk commercial vessel. pic.twitter.com/nSofVQPb25
— Abu Dhabi Ports (@AbuDhabiPorts) March 17, 2021
“எங்களது வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சேவைகளை வழங்கும் நோக்கோடு நாங்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளில் இது குறிப்பிடத்தக்க படிநிலையாகும்” என சஃபீன் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கேப்டன் ஆதில் பாணிஹமாத் தெரிவித்தார்.
அபுதாபி துறைமுகங்களின் விரிவாக்கப் பணிகளில் இது முக்கிய திருப்புமுனையாக அமையும் என ஆதில் குறிப்பிட்டார்.
பெயர் காரணம்
அமீரக – ஓமான் எல்லையில் அமைந்துள்ள ஜபீல் ஹஃபீத் மலையைக் குறிக்கும் நோக்கில் இந்த கப்பலுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அபுதாபியில் அமைந்துள்ள ஒரே மலை இதுவாகும்.
இந்த மாதத்திலிருந்து சேவையைத் துவங்கவுள்ள இந்தக் கப்பலின் புகைப்படங்களை அபுதாபி துறைமுகங்கள் சமீபத்தில் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.