UAE Tamil Web

துபாயின் நம்பிக்கை நட்சத்திரமான இளவரசர் ஷேக் ஹம்தானின் பிறந்தநாள் இன்று – அவரைப்பற்றிய சுவாரஸ்யத் தகவல்கள் இதோ..!

Sheikh-hamdan-falcon

தமிழில் தாயைப் போல பிள்ளை, நூலைப்போல சேலை என்ற பழமொழி இருக்கிறதல்லவா? இதற்கு கொஞ்சம் உல்டாவான நபர் நம் துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம். காரணம் இளவரசர் அப்படியே தனது தந்தையைப் போன்றவர். விவேகம், உலக நாடுகளுடன் நட்புறவு, நீடித்த வளர்ச்சி என துபாயின் நம்பிக்கையின் அடையாளமாகத் திகழ்கிறார் ஷேக் ஹம்தான்.

1982 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி பிறந்த ஷேக் ஹம்தான் சிறுவயது முதலே விளையாட்டு, படிப்பு என இரண்டிலும் ஆர்வம் கொண்டவராம். ரஷீத் ஆண்கள் பள்ளியிலும் துபாய் அரசுப் பள்ளியிலும் பயின்ற ஹம்தான் ஐக்கிய ராஜ்ஜியத்தில் உள்ள சாண்ட்தர்ஸ்ட் ராணுவ பயிற்சிப் பள்ளியில் படித்தார். இவரது தந்தை பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களும் இதே பள்ளியில் படித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பின்னர் ஒருமுறை நேர்காணலின் போது, சாண்ட்தர்ஸ்ட் ராணுவ பயிற்சிப் பள்ளி தனக்கு சுய ஒழுக்கம், கட்டுப்பாடு ஆகியவற்றின் முக்கியத்துவத்தைக் கற்றுக்கொடுத்ததாக குறிப்பிட்டிருக்கிறார் ஷேக் ஹம்தான். பொதுவாக அமீரக அரச குடும்பத்தினரின் குழந்தைகள் இங்கே படிப்பது வழக்கம். அதன்பிறகு புகழ்பெற்ற லண்டன் ஸ்கூல் ஆஃப் எக்கனாமிக்ஸ் -ல் பொருளாதாரம் படித்த பின் அமீரகம் திரும்பினார்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

2006 ஆம் ஆண்டு துபாய் நிர்வாகக் கவுன்சிலின் தலைவராக ஷேக் ஹம்தானை நியமித்தார் ஷேக் முகமது. உலகப்புகழ் பெற்ற பொருளாதார மேதைகளை தனது ஆலோசனைக் குழுவில் இணைத்துக்கொண்ட ஷேக் ஹம்தான், துபாயின் வளர்ச்சி சரித்திரத்தை மாற்றி எழுதத் தயாரானார். 2008 ஆம் ஆண்டு பிப்ரவரி1 ஆம் தேதி ஹம்தான் துபாயின் பட்டத்து இளவரசராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விழுந்தது இடி

வெற்று மணலாக இருந்த துபாயை உலகின் முன்னணி நகரமாக மாற்றிக்காட்டிய ஷேக் முகமதுக்கு எந்த விதத்திலும் சளைக்காதவராக அறியப்பட்டார் ஷேக் ஹம்தான். துபாய் தனது உச்சபட்ச வளர்ச்சியை அனுபவித்துக்கொண்டிருந்தது. அப்போதுதான் அந்த செய்தி அனைவரையும் திடுக்கிட வைத்தது.

ஷேக் ஹம்தானின் மூத்த சகோதரர் ஷேக் ரஷீத் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் தனது 33 வது வயதில் மாரடைப்பால் காலமானார். குழந்தைப் பருவத்திலேயே தனது அண்ணன் மீது மிகுந்த பாசம் கொண்டவரான ஷேக் ஹம்தானுக்கு இது தனிப்பட்ட இந்த இழப்பாக அமைந்தது.

உடற்பயிற்சி பிரியர்

உடல்நலத்தை பேணிக் காப்பதில் ஆர்வம் செலுத்தும் ஷேக் ஹம்தான், ஆண்டுதோறும் துபாய் ஃபிட்னஸ் சேலஞ்ச் என்னும் நிகழ்ச்சியை ஆண்டுதோறும் நடத்திவருகிறார். சைக்கிளிங், குதிரைப் பந்தயம், ஸ்கூபா டைவிங் எனப்படும் ஆழ்கடல் நீச்சல் என பல்வேறு வகையான விளையாட்டுகளில் துபாய் இளவரசர் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். 2014 ஆம் ஆண்டு நார்மாண்டியில் நடைபெற்ற உலக குதிரைப் பந்தயத்தில் (FEI World Equestrian Games) கலந்துகொண்ட ஷேக் ஹம்தான் அதில் தங்கப் பதக்கம் வென்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

விலங்குகளின் நண்பர்

பொதுவாகவே, விலங்குகள் என்றாலே துபாய் இளவரசருக்கு மிகவும் பிடிக்கும். நாய், ஒட்டகச் சிவிங்கி, மான்கள், ராஜாளிப் பறவைகள் என அவரது லவ் லிஸ்டில் இருக்கும் விலங்குகள் ஏராளம்.

ஒருமுறை அவருடைய மெர்சீடிஸ் எஸ்யூவி (Mercedes SUV) காரின் விண்ட்ஷீல்ட்-ற்கு கீழே பறவை ஒன்று கூடுகட்டியிருந்தது. முட்டைகளுடன் தனது கூட்டில் அமர்ந்திருக்கும் பறவையைப் பாதுகாக்க சில காலத்திற்கு காரை எடுக்க வேண்டாம் என உத்தரவிட்டார் துபாய் இளவரசர். யாரும் அந்தப் பறவைக்கு இடைஞ்சலாக இருக்கக்கூடாது என்பதற்காக அதனைச்சுற்றி சிவப்பு டேப் ஒன்றும் சுற்றப்பட்டது. அந்தளவிற்கு விலங்குகள் மற்றும் பறவைகள் மீது தீராக்காதல் கொண்டவர் ஷேக் ஹம்தான்.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

சாகச நாயகன்

ஆழ்கடலில் மீன்பிடித்தல் போன்ற சாகசங்களை மிகவும் விரும்பும் ஷேக் ஹம்தான் ஒருமுறை உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீஃபாவின் உச்சியில் நின்றபடி செல்பி எடுத்து வெளியிட்டார். 828 metres of excitement எனக் குறிப்பிட்ட அவருடைய இந்த புகைப்படம் இன்ஸ்டாகிராமில் அப்போது வைரலானது.

 

View this post on Instagram

 

A post shared by Fazza (@faz3)

திருமண வாழ்க்கை

கடந்த 2019 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதி ஷேக் ஹம்தான் மற்றும் அவரது சகோதர்கள் இருவருக்கும் ஒரே நேரத்தில் திருமணம் நடைபெற்றது. ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் – ஷேக்கா ஷேக்கா பின்ட் சயீத் தம்பதிக்கு கடந்த மே மாதம் 20 ஆம் தேதி இரட்டைக் குழந்தைகள் பிறந்தன. ஆண் குழந்தைக்கு ரஷீத் எனவும் பெண் குழந்தைக்கு ஷேக்கா எனவும் பெயர் சூட்டப்பட்டன.

ஷேக் ஹம்தானை அனைவரும் ஃபஸ்ஸா (Fazza) என்று செல்லமாக அழைக்கிறார்கள். ஃபஸ்ஸா என்றால் பிறருக்கு உதவுபவர் என்று அர்த்தமாம். சமூகத்தின் பாதுகாப்பையும் சுற்றுச்சூழலின் முக்கியத்துவைத்தையும் மனித மனங்களின் ஒற்றுமையையும் நோக்கமாகக்கொண்டு செயல்பட்டுவரும் ஃபஸ்ஸா நிச்சயமாக துபாயின் நம்பிக்கை நட்சத்திரம் தான்.

துபாய் இளவரசருக்கு UAE Tamil Web குழு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறது.

Sheikh-hamdan-falcon
4 Shares
Share via
Copy link