UAE Tamil Web

அபுதாபி: அமீரக நிறுவனங்களுக்கு வீட்டிலிருந்தே பணிபுரிவது எப்படி? என்னென்ன பணிகள்? அதற்கான உரிமத்தினை எப்படிப் பெறுவது – நீங்கள் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள்..!

Top-freelancing-countries-

நீங்கள் ஒரு துறையில் வல்லுனராக இருக்கிறீர்கள் என்றால் அதனைப் பயன்படுத்தி பொருளாதார ரீதியாக வலுப்படுத்திக்கொள்ள உங்களுக்குக் கிடைக்கும் வாய்ப்புகளும் அதிகம். உதாரணமாக நீங்கள் அமீரகத்தில் ஒரு நிறுவனத்தில் விற்பனை அதிகாரியாக பணிபுரிகிறீர்கள் என வைத்துக்கொள்வோம்.

- Advertisment -

ஆனால், உங்களுக்கு மொழிபெயர்ப்பில் அதீத திறமை இருக்கும்பட்சத்தில், மொழிபெயர்ப்பு நிறுவனத்திற்கு நீங்கள் உங்களுடைய உபரி நேரத்தில் பணி செய்யலாம். இதற்கென உங்களுக்கு அலுவலகம் தேவைப்படாது. நீங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கே கூட நீங்கள் செல்ல வேண்டாம்.

இப்படி பணிபுரியும் ஃப்ரீலான்சர் எனப்படும் தனியக பணியாளர்களுக்கு உரிமம் வழங்க இருப்பதாக அபுதாபி பொருளாதார மேம்பாட்டுத்துறை (ADDED) அறிவித்திருக்கிறது.

வேலைவாய்ப்பை அதிகரித்தல், பணியில் இருந்து ஓய்வு பெற்றவர்கள், குடும்பப் பெண்கள் ஆகியோரும் பயன்பெறும் வகையில் இத்திட்டம் முன்னெடுக்கப்பட்டிருப்பதாக ADDED ன் துணைச்செயலாளர் ரஷீத் அப்துல் கரீம் அல் பூஷி தெரிவித்திருக்கிறார்.

48 வகையான தொழில்களை மேற்கொள்வோர் இந்த உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம் எனவும் அமீரக குடியிருப்பாளர்கள், குடிமக்கள், குடியிருப்பாளர் அல்லாதோர் ஆகியோரும் இந்த உரிமத்தினைப் பெற விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

என்னென்ன தகுதிகள்?

ஃப்ரீலான்சர் உரிமம் பெற கீழ்க்கண்ட தகுதிகளைப் பெற்றிருத்தல் வேண்டும்.

உங்களுடைய துறையில் நீங்கள் நெடுங்காலம் பணிபுரிவதற்கு சான்றை அளிக்கவேண்டும். அதாவது,

பல்கலைக்கழகத்தில் பெறப்பட்ட பட்டம், பணி அனுபவச் சான்றிதழ் அல்லது நீங்கள் அந்த குறிப்பிட்ட துறையில் செய்த சாதனைகளுக்கான ஆதாரம் ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பதாரர் அமீரக குடியிருப்பாளராக இருந்தால்..

பொதுத் துறையில் இருப்பவராக இருந்தால் – அரசு அதிகாரியிடம் தடையில்லா (NOC) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தனியார் நிறுவனத்தில் நிலையான பணி ஒப்பந்தத்தில் இதேபோன்ற பணியை மேற்கொள்பவராக இருந்தால் – முதலாளியிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.

தனியார் நிறுவனத்தில் நிலையான பணி ஒப்பந்தத்தில் இருப்பவர் வேறுவிதமான பணியை மேற்கொள்பவராக இருந்தால் – முதலாளியிடம் தடையில்லா சான்றிதழ் பெற்றிருக்க வேண்டிய அவசியமில்லை.

தனியார் நிறுவனத்தில் பகுதிநேர பணியாளராக இருப்பவர்களுக்கும் மேற்கண்ட வழிமுறைகள் பொருந்தும்.

எவ்வளவு செலவாகும்?

530 திர்ஹம்ஸ் செலுத்தி உங்களுக்கான ஃப்ரீலான்சர் உரிமத்தைப் பெறலாம். இது இரண்டாண்டுகளுக்கு செல்லுபடியாகும். இதன்மூலமாக நீங்கள் குடியிருப்பு விசாவிற்கு விண்ணப்பித்துக்கொள்ளலாம்.

அதோடு நீங்கள் இதன்மூலம் உங்களுடைய குடும்பத்தினரை நீங்கள் ஃபேமிலி விசாவில் அமீரகத்திற்கு அழைத்துவரலாம். அதாவது, உங்களுடைய நிறுவனத்தின் பெயரில் அல்லாமல் நீங்கள் ஸ்பான்சர் செய்வதன்மூலம் 2 வருடம் செல்லுபடியாகும் ஃபேமிலி விசாவில் உங்களுடைய குடும்பத்தினரை அழைத்துவரலாம்.

என்னென்ன துறைகள்?

1. சோப்பு தயாரித்தல் (Working soap forming)

2. நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்தல் (Parties and events organising)

3. சுற்றுலா மற்றும் பொழுதுபோக்கு ஆலோசகர்கள் (Tourist and recreation consultants)

4. பசுமை வீடு ஆலோசகர் (Green buildings consultant)

5. சந்தைப்படுத்துதல் ஆலோசகர் மற்றும் ஆய்வுகள் (Marketing consultancy and studies)

6. தகவல்தொழில்நுட்ப ஆலோசகர் (Information technology consultancy)

7. மொழிபெயர்ப்பு சேவைகள் (Translation publication services)

8. பாரம்பரிய ஆலோசனைகள் (Heritage consulting)

9. ப்ளாஸ்டெரிங் மற்றும் செதுக்குதல் வேலைகள் (Plastering and carving works)

10. இயற்கை மற்றும் செயற்கை பூக்களின் ஒருங்கிணைப்பு (Coordination of natural and artificial flowers)

11. விண்வெளி ஆலோசகர்கள் (Space consultancies)

12. டிசைன் சேவைகள் (Design services)

13. தொழில்நுட்ப கருவி ஆலோசனை (Consulting technical equipment)

14. ஃபேஷன் மற்றும் துணி வடிவமைப்பு (Fashion and clothes designing)

15. ரியல் எஸ்டேட் ஆலோசனைகள் (Real estate consultancy)

16. மக்கள் தொடர்பு ஆலோசனை (Public relations consultancy)

17. மனிதவள மேம்பாட்டு ஆலோசனை (Human resource consultancy)

18. ஆற்றல் குறித்த சந்தைப்படுத்துதல் ஆலோசனை (Marketing consultancy in the field of energy)

19. கணினி பொருட்கள் மற்றும் உபகரணங்கள் கள ஆலோசனை (Computer devices and equipment domain consultancy)

20. கைவினைப் பொருட்கள் மற்றும் சுற்றுச்சூழல் பணிகள் (Handcrafted products and environmental works)

21. இயற்கை மற்றும் தோட்டக்கலை சேவைகள் (Landscape and gardening services)

22. சந்தைப்படுத்தல் செயல்பாட்டு மேலாண்மை (Marketing operations management)

23. பாராளுமன்ற ஆலோசனை (Parliamentary consultancy)

24. பொருளாதார சாத்தியக்கூறு ஆலோசனை மற்றும் ஆய்வுகள் (Economic feasibility consultancy and studies)

25. நிர்வாக ஆலோசனை மற்றும் ஆய்வுகள் (Administrative consultancy and studies)

26. பார்ட்டிகள் மற்றும் நிகழ்வுகளை புகைப்படம் எடுத்தல் (Parties and occasions photography)

27. வாழ்க்கைமுறை மேம்பாட்டு ஆலோசனை (Lifestyle development consultancy)

28. காலிகிராஃபர்கள் மற்றும் ஓவியர் (Calligraphers and painters)

29. வேளாண்மை விரிவாக்க சேவைகள் (Agricultural extension services)

30. பிளேக் எதிர்ப்பு ஆலோசனை (Plague resisting consultancy)

31. கொள்முதல் ஆலோசனை (Procurement consulting)

32. தரம், தரப்படுத்தல் மற்றும் அளவிடும் ஆலோசனை (Quality, standardisation and measuring consultancy)

33. கடல்சார் ஆலோசனை சேவைகள் (Maritime consultancies services)

34. பொருட்கள் வடிவமைப்பு ஆலோசனை (Commodities designing consultancy)

35. திட்ட மேலாண்மை சேவைகள் (Project management services)

36. நெட்வொர்க் வெப்சைட்கள் டிஸைன் செய்தல் (Network websites designing)

37. நகை வடிவமைப்பு (Jewellery design)

38. புள்ளிவிவர சேவைகள் ஆலோசனைகள் (Statistical services consultancies)

39. தனிப்பட்ட வீடியோகிராபி (Personal videography)

40. பரிசுப் பொருட்களை பேக் செய்தல் (Gift-wrapping)

41. வங்கிசார் சேவை ஆலோசனைகள் (Banking services consultancy)

42. சிற்பங்கள் உள்ளிட்ட ஒப்பனைப் பொருட்கள் செதுக்குதல் (Artwork for cosmetic craft )(sculpture)

43. திட்ட மேம்பாடு குறித்த ஆலோசனை (Consultancy project development)

44. உணவுப் பாதுகாப்பு ஆலோசனை (Food safety consulting)

45. புகைப்பட சேவை (Photography services)

46. கட்டடக்கலை உற்பத்தி மற்றும் வரைதல் தொழில்நுட்ப ஆலோசனை (Architectural production and drawing technical consultancy)

47. நுண்கலை ஆலோசனை (Fine arts consultancy)

48. தளவாட ஆலோசனை (Logistics consultancy)

ஃப்ரீலான்சர் உரிமம் பெறுவது எப்படி?

மேற்கண்ட துறைகளை பொறுமையாக கடந்துவந்தவர்களுக்கு நன்றி. அவற்றுள் உங்களுடைய துறையும் இருக்கிறதா? சரி. எப்படி உங்களுக்கான ஃப்ரீலான்சர் உரிமத்தைப் பெறுவது? எளிமைதான்.

02 815 8888 என்ற எண்ணிற்கு ADDED க்கு போன் செய்தோ அல்லது www.adbc.gov.ae என்ற இணையதளம் மூலமாக உரிமம் கோரி பதிவு செய்யலாம்.

AD Business Centre என்னும் அப்ளிகேஷன் மூலமாகவும் நீங்கள் பதிவு செய்துகொள்ளலாம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான சந்தையில் இந்த ஆப் கிடைக்கிறது.

பதிவு செய்கையில் உங்களிடம் கீழ்க்கண்ட தகவல்கள் கேட்கப்படும்.

உங்களுடைய பெயர்.

பாஸ்போர்ட் எண்.

மொபைல் எண்.

மின்னஞ்சல் முகவரி

ஆகியவற்றை அளித்து உங்களுக்கான கணக்கை (account) உருவாக்கிய பின்னர், கமெர்ஷியல் லைசன்ஸ் (Commercial licence) என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இதற்கு ஏஜெண்ட்களோ அல்லது அமீரக குடிமகனை பங்குதாரராக வைத்துக்கொள்ள வேண்டிய அவசியமோ இல்லை.