உலகில் அதிக தங்கத்தை விற்பனை செய்யும் விற்பனை மையங்களில் துபாயின் தேரா கோல்ட் சவுக்கும் (Deira Gold Souk) ஒன்று. அமீரகத்திற்கு வருகைதரும் அனைத்து மத, இன மக்களும் இங்கே தங்கம் வாங்குவதையே விரும்புகிறார்கள்.
அமீரகத்தில் கிடைக்கும் தங்கத்திற்கு இணையும் குறைவு, அதன் தரத்திற்கு கிடைக்கும் விலையும் குறைவு (இந்தியாவுடன் ஒப்பிடுகையில்). அதனாலோ என்னவோ இங்கிருந்து இந்தியா செல்லும் அனைவரும் இந்த எண்ணத்தில் இருந்து தப்புவதில்லை. இப்பதிவில் எவ்வளவு? எப்படி? தங்கத்தைக் கடத்தலாம் என்று கூறப்படவில்லை. எவ்வளவு கொண்டு சென்றால் அது கடத்தலாகக் கருதப்படாது என்று மட்டுமே கூறப்பட்டுள்ளது.
சுங்க கட்டணமில்லாமல் தங்கத்தை எடுத்துச் செல்வது எப்படி?
உலகிலேயே அதிகமாக தங்கத்தின் நுகர்வோர்கள் வசிக்கும் நாடாக இந்தியா இருப்பினும், உலகின் அதிக கடத்தல் காரர்கள் உள்ள நாடாக மாறிவிடாமல் இருக்க இந்திய சுங்க இலகா துறை தங்கத்தை பொருத்தமட்டில் கடுமையான விதிகளை பின்பற்றிவருகிறது. எனவே, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு வரும் பிரயாணிகள் தங்களுடைய “தங்க” அளவுகோலை தெரிந்து கொள்வது முக்கியமாகும்.
மத்திய மறைமுக வரி மற்றும் சுங்க துறையின் (Central Board of Indirect Taxes and Customs- CBIC) இணையத்தில் கிடைக்கும் தகவல்களின் படி,
இந்திய பாஸ்போர்ட் சட்டம் 1967ன் கீழ், காலாவதியாகாத பாஸ்போர்ட் வைத்துள்ள நபர்கள் இந்தியா தவிர வேறு வெளிநாட்டில் “ஒரு வருட காலம்” வசித்திருந்தால், அவர்கள் தங்களுடன் குறிப்பிட்ட அளவு தங்கத்தை கொண்டு வர அனுமதி உள்ளது.
அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு சுங்கக் கட்டணம் இல்லாமல் எவ்வளவு தங்கம் கொண்டு செல்லலாம்?
ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து ஆண்கள், ருபாய் 50,000 க்கு மிகாத மற்றும் 20 கிராம்களுக்கு மிகாமலும் உள்ள ஆபரணங்கள் அணிந்து செல்லலாம். இந்த வரம்பிற்குள் தங்கத்தை கொண்டு சென்றால் அது கடத்தலுமில்லை. அதற்குக் கட்டணமுமில்லை.
தங்கமே பெண்களுக்கு உரியவைதானே? எனவே பெண் பயணிகள் கொண்டுசெல்லும் 1,00,000 ரூபாய்க்குரிய மற்றும் 40 கிராம் தங்க ஆபரணங்களுக்கு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட மாட்டாது.
தங்கத்தின் சுங்க கட்டணத்தில் இருந்து சுட்டிக் குழந்தைகளுக்கும் வரி விலக்கு உண்டு.
பிரயாணிகள் கவனத்திற்கு, மேலே குறிப்பிட்டுள்ள சுங்க வரி விதியானது, தங்க நகைகளுக்கு மட்டுமே. நேர்மையாகவே உழைத்து வாங்கியிருந்தாலும் தங்கக் காசுகள், பிஸ்கட்களுக்கு சுங்க வரி (CUSTOMS DUTY) நிச்சயம் உண்டு.
தங்க அளவுகோல்
மேலே குறிப்பிட்ட அளவைக் காட்டிலும் பயணிகள் வைத்திருக்கும் தங்கத்தின் அளவு கூடும்பொழுது இந்திய சுங்கத்துறை அந்த கூடுதல் தங்கத்திற்கு கட்டணம் விதிக்கிறது.
இந்திய பாஸ்போர்ட் வைத்துள்ள பயணிகள் ஒரு வருட காலம் அமீரகம் அல்லது ஏதேனும் பிற வெளிநாடுகளில் வசித்திருந்தால் அவர்கள் தங்களுடன் ஒரு கிலோ எடையுள்ள தங்க கட்டி அல்லது காசுகளை கொண்டு வர அனுமதியுள்ளது. ஆனாலும் நிர்ணயிக்கப்பட்ட அளவை விட கூடுதல் தங்கம் கொண்டு வருவதால் அவர்கள் சுங்கக் கட்டணம் செலுத்திட வேண்டும்.
கடந்த 2019 ஆம் ஆண்டு, அமீரகத்தில் இருந்து கொண்டுவரும் தங்கத்திற்கான சுங்க வரி (தங்கத்தின் மதிப்பில்) 10 விழுக்காட்டில் இருந்து 12.5 விழுக்காடாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
சுங்கத்துறை வரி நிலவரம்
அமீரகத்தில் இருந்து கொண்டு வரப்படும் தங்கத்திற்கு இந்திய சுங்க வரிக் கட்டணம் பின்வருமாறு,
தங்கத்தின் வடிவங்கள் | சுங்க வரி |
தங்க கட்டிகள் | ஒவ்வொரு 10 கிராம்களுக்கும் 300 ரூபாய். + 3% Edu. Cess |
தங்க ஆபரணங்கள், காசுகள், டோலா பார்கள் | ஒவ்வொரு 10 கிராம்களுக்கும் 300 ரூபாய். + 3% Edu. Cess |
முக்கியக் குறிப்பு: ஆறு மாத காலம் அமீரகத்தில் தங்கியிராது இந்தியா திரும்பும் பயணி ஒருவர் மேலே குறிப்பிடப்பட்டுள்ள தங்க வரம்பிற்குள் இருந்தாலும் அதற்காக அவர் மேலும் 36.5% கட்டணத்தை கூடுதல் வரியாக செலுத்தியாக வேண்டும்.
ஆச்சரியப்படும்படியாக, UAE தூதரக இணையதளமானது பின்வருமாறு தெரிவிக்கிறது. “அமீரகத்தில் இருந்து இந்தியா செல்லும் பயணி தன்னுடன் 10 கிலோவுக்கு மேல் தங்கம் எடுத்துச் செல்ல அனுமதியில்லை”. இந்த பத்து கிலோவானது ஆபரணங்கள், மற்ற தங்க சமாச்சாரங்களையும் உள்ளடக்கியது. ஆனாலும் மறவாதீர், ஒரு கிலோவுக்கு மிகுந்த தங்கத்திற்கு சுங்க வரியானது 36.5%.
ஒரு உதாரணமாக துபாயில் ஒரு கிலோ தங்கத்தின் விலை இந்திய மதிப்பில் ரூபாய் 43,57,028.54 (சராசரியாக 219,226 திர்ஹம்கள்). அதே ஒரு கிலோ தங்கமானது இந்திய சந்தையில் 47,90,000 ரூபாய். இதோடு 36.5% வரியிணை (17,48,350) சேர்த்தால் எகிறி நிற்பது 65,38,350 ரூபாய். இதற்கு பயந்துதான் பல புலிகேசிகள் துபாயில் தங்க வேட்டையில் ஈடுபட்டு பிடிபட்டுப்போகிறார்கள்.
எவ்வாறாயினும் நீங்கள் படித்த மேற்கண்ட விதிமுறைகள் 22 கேரட் அல்லது அதற்குக் குறைவான தூய்மையுள்ள நகைகளை எடுத்துச் செல்லும்போது மட்டுமே பொருந்தும். அதைவிட முக்கியம் மேற்கண்ட அளவுகள் சுற்றுலாவிற்காக அமீரகம் வந்து திரும்புபவர்களுக்குப் பொருந்தாது.
அளவுக்கு மீறிய தங்கத்தை கொண்டு வருவோரா நீங்கள்? எனில், நீங்கள் அறிய வேண்டிய விதிமுறைகள்:
- அதிகப்படியான தங்கத்திற்கான சுங்க கட்டணம் சர்வதேச சந்தையில் பரிமாற்றம் செய்யக்கூடிய வெளிநாட்டுப் பணமாக இருக்க வேண்டும்.
- பயணிகள் தங்களுடைய கூடுதல் தங்கமானது பறிமுதல் செய்யப்படாமல் இருக்க அந்த தங்கம் வாங்கியதற்கான அனைத்து ஆதரங்களையும் சமர்ப்பிக்க வேண்டும்.
- தகுந்த, நம்பகமான ஆதாரங்களை சமர்ப்பிக்கத் தவறினால் தங்களுடைய தங்கம் பறிமுதல் செய்யப்படுவதோடு ஆதாரங்கள் கிடைக்கும் வரை வழக்கு பதிவு செய்யப்பட்டு நீங்கள் தற்காலிகமாக கைது செய்யப்படுவீர்கள்.
- தங்கக் கட்டிகள் மீது அனைத்து அங்கீகரிக்கப்பட்ட தகவல்களும் பொறிக்கப்பட்டிருக்க வேண்டும். அதாவது, அதன் எடை, உற்பத்தியாளர், சீரியல் எண்கள் ஆகியன.
- ஒரு கிலோவுக்கு மேல் தங்கம் கொண்டு வருவதற்கு இருக்கும் மிகமுக்கிய கட்டுப்பாடு என்னவெனில், அந்நபர் கடந்த ஆறு மாத காலத்திற்குள் எந்த வித தங்க, வைர, விலை மதிப்பற்ற ஆபரணங்களையும் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கு மேல் எடுத்துச் சென்றிருக்கக் கூடாது.
- கடந்த கால குறுகிய கால பிரயாணங்களிலிருந்து அந்நபர் எந்தவித சுங்க கட்டணங்களில் இருந்தும் சலுகைகள் பெற்றிருக்கக் கூடாது.
- விலை மதிப்புமிக்க கற்கள் பதித்த தங்க ஆபரணங்கள் இந்தியாவுக்கு கொண்டு செல்ல அனுமதியில்லை.
- பிரயாணியானவர் அந்த தங்கத்தினை தன்னோடே லக்கேஜ்ஜில் கொண்டு செல்லலாம். அல்லது தம் வருகைக்கு பின் அடுத்த 15 நாட்களுக்குள் வந்திறங்கும்படியான தனியொரு லக்கேஜில் (unaccompanied baggage) கொண்டு செல்ல வழி செய்யலாம்.
- சுங்க அனுமதி பெற்ற ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியாவின் கிடங்கில் (Customs bonded warehouse of the State Bank of India) இருந்தும் மற்றும் மெட்டல் & மினரல்ஸ் ட்ரேடிங் கார்ப்பரேஷன் (Metals and Minerals Trading Corporation) இல் இருந்தும் மட்டுமே இத்தகைய தங்கத்தினை கொண்டு செல்ல இயலும்.
- அதிகப்படியான (1 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள) தங்கத்தைக் கொண்டு செல்லும் நபர் தன் வருகையின் போது எழுத்துப் பூர்வமாக இவ்வளவு தங்கத்தை கொண்டு வந்ததன் பின்னால் இருக்கும் தன்னுடைய நோக்கம் குறித்த அறிக்கையொன்றினை சுங்க அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்.
- அப்படியில்லையேல் தங்களது பயணத்திற்கு முன்னதாகவே சுங்கத்துறையின் அதிதி (Atithi) அப்ளிகேஷன் மூலமாக இதனை மேற்கொள்ளலாம்.
அமீரகத்தில் தங்கம் வாங்குவதற்கு முக்கிய காரணமே அதன் நம்பகத்தன்மையும் விலை மலிவுமே. குறிப்பாக அதற்கான வரிகளை செலுத்தும்போது குறையும் கட்டணமே. எனினும் நேர்மையான பிரயாணிகள் அமீரகத்திலிருந்து இந்தியாவுக்கு செல்வதற்கு முன்னர் தங்களுடைய தங்க அளவுகோலை கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டும். மேலும் அமீரகத்திற்கு வருவதற்கும் அங்கிருந்து சொந்த நாட்டிற்கு செல்வதற்கும் முன் அமீரக விமான நிலையத்தில் தடை செய்யப்பட்ட பொருள்களைப் பற்றியும் அறிந்திருத்தல் அவசியம்.
இந்திய கலால் மற்றும் சுங்க வாரியம் (Indian Central Board of Excise and Customs ) அவ்வப்போது இறக்குமதி குறித்த புதிய விதிமுறைகளின் மூலம் பொருளாதாரத்திற்கு நன்மை தரும் நேர்மையான தங்கத்தின் இறக்குமதிக்கு வழிவகைசெய்கிறது. அதன் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் புழக்கத்திற்கு வரும்போது பயணிகளுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் இலகுவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.