UAE Tamil Web

அமீரகத்தில் பெற்ற கடனை திரும்பச் செலுத்தாமல் இந்தியா சென்றவர்கள் மீண்டும் அமீரகம் திரும்புவதற்கு என்ன செய்யவேண்டும்? – நிபுணர்கள் சொல்வது என்ன?

-credit-cards_

அமீரகத்தில் நிலுவையில் இருக்கும் கடன் தொகைகளை திரும்பச் செலுத்தாமல் இந்தியாவிற்குச் சென்றவர்கள் மீண்டும் அமீரகத்திற்கு வரவேண்டுமானால் என்ன மாதிரியான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும்? என்பதை விளக்குவதே இப்பதிவின் நோக்கமாகும்.

அமீரக செய்தி நிறுவனமான கல்ஃப் நியூஸ் நிறுவனத்திடம் முன்னாள் அமீரக வாழ் இந்தியர் கேள்வி ஒன்றினை எழுப்பியுள்ளார். அதில்,” நான் சில வருடங்களுக்கு முன்னர் அமீரகத்தில் வசித்துவந்தேன். என்னிடம் அப்போது இரண்டு கிரெடிட் கார்டுகள் இருந்தன. எனது தாயாருக்கு எதிர்பாராதவிதமாக உடல்நிலை மோசமாகவே நான் உடனடியாக இந்தியா திரும்பவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. அங்கே வசிக்கையில் என்னிடம் போஸ்ட் பெய்ட் சிம்கார்டு ஒன்றும் இருந்தது. அதில் 200 திர்ஹம்ஸ் தொகை செலுத்தவேண்டியதிருக்கிறது. இப்போது எனக்கு துபாயில் உள்ள நல்ல நிறுவனத்தில் வேலை கிடைத்திருக்கிறது. நல்ல ஊதியம் தருவதாக வாக்களித்திருக்கிறார்கள். நான் மீண்டும் அமீரகம் வந்தால் எம்மாதிரியான சட்ட சிக்கல்களை சந்திப்பேன்? விமான நிலையத்தில் உள்ள குடியேற்றத்துறை அதிகாரிகள் என்னை அமீரகத்திற்குள் அனுமதிக்க வேண்டுமானால் நான் என்னென்ன நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்? ” எனக் கேட்டிருக்கிறார்.

மேற்குறிப்பிட்ட இந்தியரின் கேள்வியானது அபுதாபியை மையமாகக்கொண்டு இயங்கும் எல்நாகர் சட்ட ஆலோசனை மையத்தின் பங்குதார மேலாளரான திரு.அகமது எல்நாகரிடம் எழுப்பப்பட்டிருக்கிறது. அதற்கு அவரளித்த பதிலைக் கீழே காண்போம்.

“நீங்கள் பணம் செலுத்துவதில் தவறிழைத்ததன் காரணமாக உங்களுக்கு என்ன சட்ட சிக்கல்கள் இருக்கலாம் என்பதை அடையாளம் காண்பது முதல் படி. மேலும், உங்கள் வேலையை திடீரென விட்டுவிட்டதற்காக உங்கள் முதலாளி உங்களுக்கு எதிராக  புகார் அளித்தாரா இல்லையா என்பதை நீங்கள் சரிபார்க்க வேண்டும். இதற்கு நீங்கள் ஒரு  வழக்கறிஞரை நியமிப்பதன் மூலம் காவல்துறை, அரசு வக்கீல் மற்றும் நீதிமன்ற அமைப்புகளில் உங்கள் பெயரை விரைவாகச் சரிபார்க்கலாம்.

இவ்வாறு செய்வதன்மூலம் உங்களுடைய பெயரில் வழக்குகள் பதியப்பட்டிருக்கின்றனவா? ஆம் எனில் எம்மாதிரியான சட்ட சிக்கல்களை நீங்கள் எதிர்கொள்ளவேண்டிவரும் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளலாம். அதுமட்டுமல்லாமல் நீங்கள் பெற்ற கடனுக்கு வட்டி விதிக்கப்பட்டிருக்கிறதா? அதைத் திரும்ப செலுத்தாதன் காரணமாக உங்களுக்கு சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்பிருக்கிறதா என்பதையும் அறியலாம்.

இவை எவற்றையுமே செய்யாமல் நீங்கள் அமீரகத்திற்கு வந்தால் உங்களுடைய புதியவேலை மற்றும் உங்களுடைய சுதந்திரத்தை இழக்க நேரிடலாம். ஆகவே, அமீரகத்திற்கு திரும்புவதற்கு முன்னர் நீங்கள் பெற்ற கடனின் நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்வது அவசியமாகிறது.

ஆகவே என்னுடைய ஆலோசனை என்பது அமீரகத்திற்கு வருவதற்கு முன்பே, உங்களுடைய நிதி மற்றும் சட்ட நிலை என்ன என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்பதாகும். இதனை ஆடம்பரமாக எண்ணவேண்டாம். இது மிகவும் அத்தியாவசியமாகும். அமீரகம் வருவதற்கு மட்டுமல்லாமல் அமீரகம் வழியாக வேறு நாடுகளுக்குப் பயணிப்பதற்கும் இந்த நடைமுறைகள் பொருந்தும்.

மேலும், நீங்கள் வெளிநாட்டில் இருக்கும்பட்சத்தில் உங்களுக்கு கடன் வழங்கிய நபர் அல்லது தனியார் நிதி நிறுவனங்களுடன் நீங்கள் பேச்சுவார்த்தை நடத்துவது பயனுள்ளதாக இருக்கும்” என்றார்.

-credit-cards_
0 Shares
Share via
Copy link