UAE Tamil Web

லூலூ சாம்ராஜ்யத்தின் சக்கரவர்த்தி – யூசுப் அலியின் வியக்கவைக்கும் வரலாறு..!

what-yusuff-ali-said

சமகால வரலாற்றில் லூலூ குழுமத்தின் வளர்ச்சி அசாதாரணமானது. உலகம் முழுவதும் வெற்றிக்கொடியைப் பறக்கவிடும் இந்த பிரம்மாண்ட குழுமத்தை துவங்கிய MA.யூசுப் அலி கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பிறந்தவர். நத்திகாவில் பள்ளிக்கல்வி பின்னர் குஜராத்தில் தொழில் மேலாண்மை மற்றும் நிர்வாகப் பிரிவில் பட்டயப்படிப்பினை அலி முடித்தார்.

அப்போதைய இந்தியர்களின் கனவான அமீரகத்திற்குச் செல்லவேண்டும், பணம் சம்பாதிக்கவேண்டும் என்ற எண்ணம் அலியிடத்திலும் இருந்தது. அபுதாபிக்கு கிளம்பினார். வருடம் 1973. அமீரகம் அதுவரையில் காணாத ஒரு தொழில்துறை ஜாம்பவானை எதிர்கொள்ளத் தயாராக இருந்தது.

ma-yusuff-ali-2
Image Credit: onmanorama

அபுதாபியில் லூலூ குழுமத்தை நிறுவியவரும் அதன் தலைவருமான தனது உறவினர் MK அப்துல்லா (MK Abdullah) அவர்களின் துணையோடு லூலூ குழுமத்தில் பணிக்குச் சேர்ந்தார் அலி. இரவுபகல் வித்தியாசமில்லாத உழைப்பு, புதிய அணுகுமுறைகள், வளர்ச்சியை நோக்கிய சிந்தனை என துடிப்புடன் செயல்பட்ட அலி, மொத்த விற்பனை மற்றும் ஹைப்பர் மார்கெட் சித்தாந்தத்தை உள்ளே கொண்டுவந்தார். அசுர வளர்ச்சிக்கு அஸ்திவாரம் போட்ட இடம் அதுதான்.

1990 களின் துவக்கத்தில் வளைகுடா யுத்தம் உச்சம் தொட்டிருந்த சமயம் லூலூ தனது முதல் ஹைப்பர் மார்க்கெட்டைத் திறந்தது. சில்லறை வர்த்தகம், இறைச்சி ஏற்றுமதி என மக்களின் தேவை எங்கெல்லாம் இருந்ததோ அதையெல்லாம் இலக்காக வைத்து செயல்பட்டது லூலூ குழுமம். அதுவும் அபாரமான வேகத்தில். இன்றைய தேதியில் லூலூ குழுமம் 193 சூப்பர் மார்க்கெட் மற்றும் ஷாப்பிங் மால்களை நிர்வகித்து வருகிறது.

yussuf ali
Image Credit: Twitter

இவற்றில் பெரும்பாலானவை மத்திய கிழக்கில் அமைந்திருக்கின்றன. மேலும் மலேசியா மற்றும் இந்தோனேஷியா ஆகிய நாடுகளுக்கு ஹலால் இறைச்சி ஏற்றுமதியில் இந்நிறுவனம் பெரும்பங்கு வகிக்கிறது.

இந்தியா, ஓமான், கத்தார், குவைத், பஹ்ரைன், சவுதி அரேபியா, எகிப்து, இந்தோனேசியா, தாய்லாந்து, வியட்நாம், மலேசியா, பிலிப்பைன்ஸ், சீனா, இலங்கை, கென்யா, உகாண்டா, தென்னாப்பிரிக்கா, துருக்கி, ஸ்பெயின், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் லூலூ குழுமம் இயங்கிவருகிறது. இங்கே உலகமெங்கிலும் 37 நாடுகளைச் சேர்ந்த 50,000 பணியாளர்கள் பணியாற்றிவருகிறார்கள். இதில் பாதிக்கும் அதிகமானோர் இந்தியர்கள். இந்தக் குழுமத்தின் வருடாந்திர வருமானம் 7.4 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

yussuf ali 1
Image Credit: Twitter

மனிதநேயம்

தொழில்துறையில் தவிர்க்கமுடியாத நபராக வளர்ந்துவரும் அதேவேளையில் சமூகத்திற்கும் தொடர்ந்து பங்களிப்பு செய்துவருகிறார் யூசுப் அலி. இவருடைய சில குறிப்பிடத்தகுந்த சேவைகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

 • துபாய் கேர் அமைப்புடன் இணைந்து காஸா மற்றும் நேபாளத்தில் பள்ளிகளை நடத்திவருகிறார்.
 • இந்தியாவைச்சேர்ந்த பல்வேறு சமூக மக்களுக்காக ஷார்ஜாவில் 8.3 ஏக்கர் பரப்பில் கல்லறை ஒன்றை அமைத்துள்ளார்.
 • அமீரகத்தில் சிறப்பு கவனம் தேவைப்படும் குழுக்களால் விளைவிக்கப்படும் இயற்கைசார் பொருட்களை தனது ஹைப்பர் மற்றும் சூப்பர் மார்கெட்கள் மூலமாக விற்பனை செய்துவருகிறார்.
 • குஜராத் பூகம்பம், சுனாமி போன்ற இயற்கை பேரிடர் காலத்தில் மக்களுக்கு பல்வேறு வகையில் இவர் உதவினார். குறிப்பாக 2018 ஆம் ஆண்டு கேரளாவில் ஏற்பட்ட பெரும் வெள்ளத்தின் போது 9.5 கோடி ரூபாயை மக்கள் மறுவாழ்விற்காக வழங்கினார். 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளத்தின் போது 5 கோடி ரூபாயை கேரள அரசின் மீட்புப் பணிகளுக்கு அளித்தார்.
 • அமீரகத்தில் தூக்குதண்டனை விதிக்கப்பட்ட இந்தியரது விடுதலைக்காக 5 லட்சம் திர்ஹம்ஸ் தொகையை செலுத்தி, அவரை விடுதலை பெற பாடுபட்டார். மேலும் அவருக்கு தனது நிறுவனத்திலேயே வேலை அளிப்பதாகவும் அறிவித்தார்.
 • மதங்களைக் கடந்து மனிதே சேவையில் ஈடுபட்டுவரும் இவர் அபுதாபியில் கட்டப்பட்டுவரும் CSI தேவாலய கட்டுமானப் பணிக்கு 5 லட்சம் திர்ஹம்ஸ் நன்கொடை அளித்து பல்வேறு மக்களின் பாராட்டைப் பெற்றார்.
 • கொரோனாவால் பாதிப்படைந்த குடும்பங்கள் மற்றும் சமூக மக்களுக்கு ரமலான் மாதத்தில் உதவும் வகையில் 100 Million Meals திட்டத்தினை அமீரக அரசு துவங்கியது. இந்தத் திட்டத்திற்கு 10 லட்சம் திர்ஹம்ஸ் தொகையை அளித்து தான் ஒரு உலகத்து குடிமகன் என்பதை மீண்டும் நிரூபித்தார்.
Lulu-
Image Credit: Gulf News

இப்படி நாடு, இனம், மொழி என்ற பாகுபாட்டைக் கடந்து மொத்த மனுடத்திற்கான வளர்ச்சிக்காக யூசுப் அலி பாடுபட்டுவருகிறார் என்றால் அது மிகையல்ல.

உலுக்கிய விபத்து

கடந்த ஏப்ரல் மாதம் கேரளாவின் கொச்சியின் எல்லைப்புறத்தில் உள்ள பணக்காட் என்னுமிடத்தில் யூசுப் மற்றும் 6 பேர் ஹெலிகாப்டரில் பயணம் செய்யும்போது கனமழை காரணமாக அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்தினை சந்தித்தது. அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டரின் பின் பகுதியில் அமர்ந்திருந்த அலிக்கு இதனால் முதுகுப் பகுதியில் லேசான காயம் ஏற்பட்டது.

இதனையடுத்து உடனடியாக அபுதாபி திரும்பிய அலிக்கு முதுகுத்தண்டில் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. 25 மருத்துவ நிபுணர்களினால் மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது.

பின்னர் அதுபற்றிக் குறிப்பிட்ட யூசுப் அலி, “என்னுடைய மறுபிறப்பு இது ; அல்லாவின் பெருங்கருணையை அப்போது உணர்ந்தேன்” என்றார்.

தொழில்துறை ஜாம்பவான்

கேரளாவில் உள்ள கத்தோலிக்க சிரியன் வங்கி (4.99%) , தனலட்சுமி வங்கி (4.99%), பெடரல் வங்கி (4.47%), சவுத் இந்தியன் வங்கி (2%) ஆகியவற்றில் யூசுப் அலி முதலீடு செய்துள்ளார். போலவே கொச்சி சர்வதேச விமான நிலையத்திலும் இவர் 10% முதலீடு செய்திருக்கிறார். லண்டனில் உள்ள ஸ்காட்லாந்து யார்டு கட்டிடத்தை வாங்கியபோது பலரும் அலியை ஆச்சர்யத்துடன் பார்த்தனர்.

இவை தவிர்த்து கேரளாவில் இரண்டு மேரியாட் ஹோட்டகள் (Marriott hotels), லூலூ டெக் பார்க் மற்றும் கிராண்ட் ஹையாத் ஹோட்டல் ஆகியவற்றையும் இவர் நிர்வகித்து வருகிறார். இவருடைய சொத்து மதிப்பு 4.8 பில்லியன் அமெரிக்க டாலர்களாகும்.

dubai-cares-honors
Image Credit: yussuf ali MA

பிரபல ஃபோர்ப்ஸ் இதழின் அறிக்கைப்படி யூசப் அலி 2021 ஆம் ஆண்டின் உலகின் 589வது பணக்காரராகவும் இந்தியாவைப் பொறுத்தவரையில் 29வது பணக்காரராகவும் இருக்கிறார்.

அபுதாபி வணிக மற்றும் தொழில்துறைக்கான குழுவின் இயக்குனராக இவர் 3 முறை தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். உலகின் வளமிக்க அபுதாபியின் வணிக மற்றும் தொழில்துறைக்கான இயக்குனராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் வெளிநாட்டவர் என்ற பெருமை யூசுப் அலியையே சாரும்.

அதேபோல, அரபு தேசத்தை சார்ந்திடாத ஒருவர் தொடர்ந்து இருமுறை இப்பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதுவே முதன்முறையாகும்.

குடும்பம்

யூசுப் அலி – ஷபீரா தம்பதிக்கு ஷபீனா, ஷஃபீனா மற்றும் ஷிபா என்ற மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இவருடைய மூத்த மகள் ஷபீனா, VPS ஹெல்த்கேர் குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான ஷம்ஷீர் வயலில் – ஐ கரம் பிடித்தார். இரண்டாவது மகள் ஷஃபீனா லூலூ இண்டர்நேஷனல் எக்சேஞ் நிறுவனத்தின் தலைவரும் தொழிலதிபருமான அதீப் அஹமது என்பவரைத் திருமணம் செய்துகொண்டார்.

விருதுகள்

 • வெளிநாட்டு வாழ் இந்தியருக்கு அளிக்கப்படும் மிக உயரிய விருதான பிரவசி பாரதிய சம்மான் (Pravasi Bharatiya Samman Award) 2005 ஆம் ஆண்டு யூசுப் அலிக்கு வழங்கப்பட்டது.
 • 2008 ஆம் ஆண்டில் பத்ம ஸ்ரீ விருதினைப் பெற்றார்.
 • ஸ்விட்சர்லாந்து – அமீரகம் இடையிலான வர்த்தக உறவை மேம்படுத்தியதால் 2012 ஆம் ஆண்டு இவருக்கு சுவிட்சர்லாந்து தூதரின் சிறப்பு விருதளிக்கப்பட்டது.
 • அதே ஆண்டில் மத்திய கிழக்கு மற்றும் வடக்கு ஆப்பிரிக்காவின் சக்திவாய்ந்த ஆசிய தொழிலதிபர் என்ற விருதை மத்திய கிழக்கிற்கான ஃபோர்ப்ஸ் இதழ் இவருக்கு வழங்கியது.
 • 2018 ஆம் ஆண்டில் மிடில்செக்ஸ் மற்றும் கேரளாவைச் சேர்ந்த மகாத்மா காந்தி பல்கலைகழகம் இவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி சிறப்பித்தன.
 • அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதபப்டையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியின் மிக உயரிய விருதான அபுதாபி விருது 2021 (Abu Dhabi Award 2021) -ஐ யூசுப் அலிக்கு வழங்கி கவுரவித்தார்.

கேரளாவின் சிறிய கிராமத்திலிருந்து அமீரகத்திற்கு வந்த இளைஞன் இன்று உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்திருக்கிறார். இதற்குப் பின்னால் வார்த்தைகளில் விவரிக்க முடியாத உழைப்பு நிறைந்திருக்கிறது. இன்றும் பல இளைஞர்களுக்கு உத்வேகம் அளிப்பவராகவும் ஆதர்ச நாயகனாகவும் வலம் வரும் யூசுப் அலி, தொழில், செல்வம் என்பது மட்டுமல்லாமல் சிறந்த மனிதனாக எப்படி ஒருவர் இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணமாகவும் திகழ்கிறார்.

0 Shares
Share via
Copy link
Powered by Social Snap