UAE Tamil Web

“அமீரகத்தின் தாய்” எனக் கொண்டாடப்படும் ஷேக்கா பாத்திமா..! – யார் இவர்..?

sheikka fatima pic

இன்று (ஆகஸ்டு 28) அமீரக மகளிர் தினம் கொண்டாடப்படுகிறது. பொதுவாகவே மத்திய கிழக்கில் குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் இஸ்லாமிய நாடுகளில் பெண்களுக்கு உரிமைகள் மறுக்கப்படுகின்றன; கல்வி, வேலைவாய்ப்பு போன்றவற்றில் இன்னும் அவர்கள் பின்தங்கித்தான் இருக்கிறார்கள் என மேற்கத்திய உலகம் நினைப்பதுண்டு.

ஆனால் அமீரகத்தில் நிலைமை தலைகீழ். கல்விக்கூடங்களில் பெண்களுக்கு உதவித்தொகை, அறிவியல் ஆராய்ச்சிப் படிப்புகளில் முன்னுரிமை, அரசியலில் ஆண்களுக்கு சரிசமமாக ஒதுக்கீடு என ஆண்களுக்கு பெண்கள் எவ்விதத்திலும் சளைத்தவர்கள் அல்ல என்பதை அமீரகம் அதன் வேரிலிருந்தே உணர்ந்து வந்திருக்கிறது.

பெண் முன்னேற்றம் என்ற ஒன்று நிகழாமல் உலகத்தின் எந்த நாடும் உன்னதமடையாது என்ற வரலாற்று வாசகத்திற்கு வாரிசாக அமீரகம் அறியப்படுகிறது. இதற்கு அச்சாரமிட்டவர் தான் பெருமதிப்பிற்குரிய ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் அல் நஹ்யான்.

அமீரகத்தின் தந்தையும் முன்னாள் அபுதாபியின் (அமீரகத்தின் மொத்த கிழக்கு பிராந்தியத்தின்) ஆட்சியாளருமாக இருந்த மாமேதை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் அல் நஹ்யான் அவர்களுடைய மனைவிதான் ஷேக்கா பாத்திமா.

தற்போதைய அபுதாபியின் பட்டத்து இளவரசரும் அமீரக ஆயுதபப்டையின் தலைமைத் துணைத் தளபதியுமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அவர்களின் தாய் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

அமீரகம் நாடாக உருப்பெறுவதற்கு முன்னரே ஒரு நாட்டில் பெண்களின் வளர்ச்சி அத்தியாவசியமானது என்பதை ஷேக்கா பாத்திமா தெளிவாக உணர்ந்திருந்தார். பின்னர் எமிரேட்கள் இணைந்து அமீரகம் உருவானதற்குப் பிறகு பெண்களில் கல்வி, சமூக முன்னேற்றத்திற்கு பல்வேறு ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை இவர் முன்மொழிந்தார்.

அமீரக அரசியல் வரலாற்றிலும் ஷேக்கா பாத்திமா அன்பாதிக்கம் செலுத்துபவராக இருந்தார். அமீரகத்தில் பெண்கள் சமூக ரீதியாக வலுப்பெற விரும்பிய ஷேக்கா பாத்திமா 1973 ஆம் ஆண்டு மகளிருக்கான அசெம்ப்ளியை துவங்கினார். இதுவே பின்னர் 1975 ஆம் ஆண்டு மகளிர் யூனியன் துவங்க ஆரம்பப் புள்ளியாக அமைந்தது எனலாம்.

ஒவ்வொரு துறையிலும் பெண்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்ற ஒரே எண்ணத்துடன் இருந்த இவர் 2003 ஆம் ஆண்டு தாய் சேய்க்கான உச்ச சபையை அமைத்தார். நாட்டின் ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவை குடும்பங்களின் மகிழ்ச்சியில் இருந்துதான் விளைகிறது எனச் சொல்லிய ஷேக்கா பாத்திமா 2005 ஆம் ஆண்டு குடும்ப மேம்பாட்டு அறக்கட்டளையைத் துவங்கினார்.

பெண்களுக்கு கல்வியை அளிக்காமல் அவர்களை முன்னேற்ற முடியாது என தீர்க்கமாக நம்பிய இவர், படிப்பில் சிறந்து விளங்கும் மாணவிகளுக்கு இலவசக் கல்வி அளிக்கப்படும் என அறிவித்தார். போலவே, அதிக மதிப்பெண் எடுக்கும் மாணவிகளுக்கு 2005 ஆம் ஆண்டு முதல் ஷேக்கா பாத்திமா விருது வழங்கப்பட்டுவருகிறது.

அமீரகத்தில் பெண் கல்வியறிவு சதவீதம் அதிகரித்ததில் ஷேக்கா பாத்திமா அவர்களின் உழைப்பு அசாத்தியமானது என்பதை யாரும் மறுக்கமுடியாது. இதனை அமீரகத்தை தாண்டியும் செயல்படுத்த விரும்பி மத்திய கிழக்கு முழுவதிலும் உள்ள சிறந்த மாணவிகளுக்கு கல்வி உதவித் தொகை வழங்க உத்தரவிட்டார் ஷேக்கா பாத்திமா. இந்தத் திட்டத்தின் கீழ் இந்தியாவிலும் ஏழைப் பெண்களுக்கு கல்வி உதவித்தொகை கிடைத்துவருவது குறிப்பிடத்தக்கது.

விளையாட்டு, தடகளப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்பு கிடைக்காதா? என ஏக்கத்தோடு காத்திருந்த பெண்களுக்கு அதற்கான கதவுகளை அகலத் திறந்துவைத்தார் ஷேக்கா. சிறந்த பெண் தடகள வீராங்கனைகளுக்கு ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் விருது அளிக்கப்பட்டு அவர்களுக்கு உதவித்தொகையும் அளிக்கப்பட்டுவருவது குறிப்பிடத்தக்கது.

ஷேக்கா பாத்திமா லேடிஸ் அகாடமி என்னும் பெயரில் பெண் விளையாட்டு பயிற்சி மையம் அமைத்து அமீரகப் பெண்களின் பலநாள் ஆசையை நிறைவேற்றினார். பெண்களுக்கான அமைதி மற்றும் பாதுகாப்பிற்காக ஒருங்கிணைந்த தேசிய திட்டத்தை ஷேக்கா அமல்படுத்தியிருக்கிறார்.

விருதுகள்

  • பெண்கள் முன்னேற்றத்தில் அளப்பரிய சேவைகள் செய்ததை முன்னிட்டு, ஐக்கிய நாடுகள் அவையின் 5 பல்வேறு பிரிவுகள் இவருக்கு 1997 ஆம் ஆண்டு விருதளித்து கவுரவப்படுத்தின.
  • UNIFEM அமைப்பு இவரை “பெண் உரிமைகளுக்கான போராளி” எனப் பட்டம் அளித்தது.
  • பெண் கல்வி, உரிமை மற்றும் சமூக முன்னேற்றம் ஆகியவற்றில் ஷேக்கா பாத்திமா காட்டிய அக்கறையைக் கருத்தில்கொண்டு யுனெஸ்கோ இவருக்கு மேரி கியூரி விருதளித்துப் பாராட்டியது. அரபு தேசத்தில் இருந்து இவ்விருதைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையையும் ஷேக்கா பாத்திமா பெற்றார்.
  • 2005 ஆம் ஆண்டு அல்ஜீரியா நாட்டின் மிக உயரிய விருதான நேஷனல் ஆர்டர் ஆஃப் மெரிட் விருது இவருக்கு அளிக்கப்பட்டது.

அபுதாபியில் காஸிர் அல் பஹார் செல்லும் மற்றும் ஷேக் சயீத் பின் சுல்தான் சாலையை குறுக்குவெட்டில் சந்திக்கும் சாலைக்கு ஷேக்கா பாத்திமாவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

அமீரக மகளிர் யூனியனின் தலைவியும் தாய் சேய் உச்ச சபையும் தலைவியும் குடும்ப நல உச்ச சபையின் தலைவியுமான ஷேக்கா பாத்திமா பின்ட் முபாரக் அல் நஹ்யான் தனது வாழ்நாள் முழுவதிலும் பெண்களின் வளர்ச்சிக்காகவும் தேசிய அமைதிக்காகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் உழைத்து வருகிறார்.

அமீரகத்தின் மக்களை தனது குழந்தைகளைப் போலவே நேசிக்கும் ஷேக்கா பாத்திமாவை அமீரகம் தனது தாயாக கொண்டாடுவதில் வியப்பேதுமில்லை.

sheikka fatima pic
69 Shares
Share via
Copy link