அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது தனித் திறமைகளுள் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது. ஏனெனில் சமகால வரலாற்றில் அமீரகமும் அதன் அபரிமிதமான வளர்ச்சியும் போக்குவரத்தை எந்தளவிற்கு சார்ந்துள்ளது என்பதை அனைவரும் அறிவோம். உலகின் மிக முக்கிய தேசமான அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் வைத்திருப்பது உங்களுடைய சமூக/பொருளாதார முன்னேற்றத்திற்கு நிச்சயம் உதவும் என்றால் மிகையில்லை.
அமீரகத்தில் பணிபுரிந்துவரும் உங்களது நண்பர்களிடம் ஓட்டுனர் உரிமம் பெறுவது பற்றிக்கேட்டால் நிச்சயம் உங்களை பயமுறுத்தும் விதமாக வார்த்தைகளை வீசுவார்கள். ஏனெனில் அத்தனை கடினமானது அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவது. தேர்வுகள், உடற்தகுதி, வாகனமோட்டும் தேர்வு என லைசன்சை கையில் வாங்குவதற்குள் பலபேருக்கு கண்ணைக் கட்டிக்கொண்டு வந்துவிடும். ஆனால், எப்படி விண்ணப்பிக்க வேண்டும்? என்னென்னன வழிமுறைகள்? எப்படி தேர்வை எதிர்கொள்வது என்பது போன்ற முக்கிய தகவல்களை அறிந்துகொண்டால் நீங்கள் அமீரகத்தின் ஓட்டுனர் உரிமத்தைப் பெற்றுவிடலாம்.
யாரெல்லாம் ஓட்டுனர் உரிமம் கோரி விண்ணப்பிக்கலாம்?
- நீங்கள் அமீரக குடிமகனாகவோ அல்லது குடியிருப்பாளராகவோ இருத்தல் வேண்டும்.
- 18 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் (இலகு ரக வாகனங்களுக்கு இது பொருந்தும். கனரக மற்றும் இருசக்கர வாகனங்களுக்கு வேறுவகையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன)
- மருத்துவ ரீதியில் உடற்தகுதி பெற்றவராக இருத்தல் வேண்டும். (கண்பரிசோதனை செய்திருக்க வேண்டும்)
என்னென்ன ஆவணங்கள் வேண்டும்?
- பாஸ்போர்ட் மற்றும் ரெசிடென்ஸ் விசா பக்கத்தின் நகல்.
- எமிரேட்ஸ் ஐடி மற்றும் அதன் நகல்.
- இரண்டு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படங்கள்.
- கண் மருத்துவப் பரிசோதனை அறிக்கை.
- ஸ்பான்சரிடம் இருந்து தடையில்லா சான்று பெறவேண்டும். (உங்களுடைய போக்குவரத்துறை நிர்பந்தித்தால்)
ஏமிராட்டிகளுக்கு எமிரேட்ஸ் ஐடி மட்டும் போதும். அமீரக வாழ் வெளிநாட்டவர்களுக்கு எமிரேட்ஸ் ஐடி மற்றும் ரெசிடென்ட் விசா தேவைப்படும்.
குறிப்பிட்ட சில துறைகளைச் சேர்ந்தவர்கள் தங்களுடைய ஸ்பான்சர்களிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் பெறவேண்டும். யாரெல்லாம் என்பதை உங்களுடைய ஓட்டுனர் உரிம மையத்திடமோ அல்லது சாலை மற்றும் போக்குவரத்து ஆணையத்தின் இணையதளத்தின் மூலமாகவோ தெரிந்துகொள்ளலாம். இந்தப் பணிகளை துரிதமாக மேற்கொள்ளும் நோக்கில், ஸ்பான்சர்கள் ஆன்லைன் மூலமாக தடையில்லா சான்றிதழ் வழங்கும் முறை அமீரக அரசால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
அடுத்ததாக கண் பரிசோதனை. உங்களுக்கு அருகில் இருக்கும் கண் மருத்துவர் அல்லது கண்ணாடி பரிசோதனை மையத்திற்குச் சென்று ஓட்டுனர் உரிமம் பெற கண் பரிசோதனை செய்ய வேண்டும் எனச் சொன்னால் போதுமானது. கண் பரிசோதனை அறிக்கை ரெடி. இதற்கான கட்டணம் நீங்கள் பரிசோதனை மேற்கொள்ளும் இடத்தினைப் பொருத்தது.
சொந்த நாட்டில் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் அமீரகத்தில் வாகனம் ஓட்டலாமா?
ஓட்டலாம். ஆனால் அமீரக அரசு 30 நாடுகளில் இருந்து ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே தங்களது உரிமத்தை அமீரகத்தில் செல்லுபடியாகும்படி மாற்றிக்கொள்ளலாம் என வரையறுத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. ஆகவே, நம்மாட்கள் அனைவரும் கண்டிப்பாக அமீரகத்தில் ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.
அமீரக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு நீங்கள் அங்கீகரிக்கப்பட்ட ஓட்டுனர் உரிம மையத்தினை நாட வேண்டும் என பெடரல் அரசாங்கம் வலியுறுத்துகிறது. அவை என்னென்ன என்பதைக் கீழே காணலாம்.
அபுதாபி
எமிரேட்ஸ் டிரைவிங் கம்பெனி – 600 588880
துபாய்
- எமிரேட்ஸ் டிரைவிங் இன்ஸ்டிட்யூட் – 04 263 1100
- துபாய் டிரைவிங் செண்டர் – 04 345 5855
- கலாதாரி மோட்டார் டிரைவிங் செண்டர் – 04 2676166
- பெல்ஹாசா டிரைவிங் செண்டர் – 800 2354272
- அல் அஹ்லி டிரைவிங் செண்டர் – 800-252454
ஷார்ஜா
ஷார்ஜா டிரைவிங் இன்ஸ்டிடியூட் – 06 538 2020
ராஸ் அல் கைமா
ராஸ் அல் கைமா டிரைவிங் அகாடமி – 07 233 2888
புஜைரா
புஜைரா நேஷனல் டிரைவிங் இன்ஸ்டிடியூட் – 09 201 4000
எத்தனை வகுப்புகளில் பங்கேற்கவேண்டும்?
பொதுவாக நீங்கள் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெற்றவராக இருந்தால் 10 வகுப்புகளுக்குப் பிறகு ரோட் டெஸ்ட் எனப்படும் சாலையில் வாகனமோட்டும் தேர்வில் கலந்துகொள்ள நீங்கள் அனுமதிக்கப்படுவீர்கள்.
குறைந்தபட்சம் 8 வகுப்புகளை முடித்து, தேர்வு எழுதிய பின்னரே நீங்கள் ரோட் டெஸ்டிற்கு அனுமதிக்கப்படுவீர்கள். எத்தனை டிரைவிங் டெஸ்ட்டில் பங்கேற்க வேண்டும் என்பதையும் உங்களுடைய ஓட்டுனர் உரிம மையத்திடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். முதல் டெஸ்டில் நீங்கள் தகுதியடைந்துவிட்டால் பணம் மிச்சமாகும்.
முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட வகுப்புகளுக்கென்று பல மையங்கள் தள்ளுபடி வழங்குகின்றன. அதனால் அவ்வழியைத் தேர்ந்தெடுப்பது சிறந்தது.
ஆட்டோமேட்டிக்கா? மேனுவலா?
அப்படின்னா என்கிறீர்களா? அதாவது ஆட்டோமேட்டிக் லைசன்ஸ் வைத்திருந்தால் உங்களால் ஆட்டோமேட்டிக் கியர் கொண்ட வாகனங்களை மட்டுமே ஓட்ட முடியும். இதுவே மேனுவல் லைசன்ஸ் வைத்திருந்தால் இலகு ரக மற்றும் ஆட்டோமேட்டிக் வாகனங்களையும் நீங்கள் ஓட்டலாம். எப்படி வசதி என்று நீங்களே தீர்மானித்துக்கொள்ளுங்கள்.
ஆட்டோமேட்டிக் லைசன்ஸ் பெற்றுவிட்டு இல்லப்பா.. இது செட் ஆகாது மேனுவல் தான் வேணும் என்றால் அதற்கும் வழி இருக்கிறது. உங்களுடைய ஓட்டுனர் உரிம மையத்திற்குச் சென்று விஷயத்தைச் சொல்லுங்கள். மேனுவலுக்கு மாற மீண்டும் தேர்வு உண்டு. பாஸ் பண்ணினால் லைசன்ஸ் மாற்றித் தரப்படும்.
இருப்பினும் ரோட் டெஸ்டின் போது சிறிதுநேரம் பயிற்சி எடுத்துக்கொள்ளுமாறு ஓட்டுனர் உரிம மையம் வலியுறுத்தவே செய்கிறது.
எவ்வளவு செலவாகும்?
நீங்கள் பதிவு செய்தவுடனேயே ஒருமுறை கட்டணம் (one-time fee) செலுத்தவேண்டும். பதிவு செய்தல், ரோட் டெஸ்ட்டுக்கான கட்டணம் மற்றும் உரிமம் வழங்குதல் ஆகியவற்றிற்கான கட்டணம் இதில் அடங்கும். மேலும் அதிக பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ள விரும்பினால் அதற்கு கூடுதல் கட்டணம் செலுத்தவேண்டிவரும்.
இது ஒவ்வொரு ஓட்டுனர் உரிம மையத்திற்கும் வேறுபடும். ஆகவே உங்களுடைய மையத்தினைத் தொடர்புகொண்டு செலவு நடைமுறை குறித்து தெரிந்துகொள்ளுங்கள்.
மொத்தம் எத்தனை தேர்வுகள்?
கையில் லைசன்ஸ் வாங்குவதற்கு முன்னால் நீங்கள் 3 தேர்வுகளை வெற்றிகரமாக கடக்கவேண்டும். அவை,
- தியரி டெஸ்ட் (Theory test)
- பார்கிங் டெஸ்ட் (Parking test)
- ரோட் டெஸ்ட் (Road test)
தியரி டெஸ்டில் சாலையில் பயன்படுத்தப்படும் சிக்னல்களின் பயன்பாடு, நெடுஞ்சாலை மற்றும் நெரிசலான ஜங்ஷனில் வாகனமோட்டும்போது கடைபிடிக்கவேண்டிய விதிமுறைகள், சாலை விபத்துகளின்போது எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பவை குறித்து கேள்விகள் எழுப்பப்படும். பல மையங்கள் இத்தகைய தேர்வுக்கு பயிற்சி அளிக்கின்றன. இணையத்தில் தேடினால் பல மாதிரி தேர்வுகளில் நீங்கள் கலந்துகொள்ள முடியும்.
அடுத்ததாக பார்கிங் டெஸ்ட். அதற்கு நீங்கள் கீழ்க்கண்ட இடங்களில் வாகனத்தை எவ்வாறு பார்க் செய்கிறீர்கள் என்பது கண்காணிக்கப்படும்.
- இணை பார்கிங் (Parallel parking)
- ஓர பார்கிங் (Side parking) (60 டிகிரி கோணத்தில் வாகனத்தை பார்க் செய்யவேண்டும்)
- கராஜ் பார்கிங் (Garage parking)
- மலைப்பகுதி (Hill)
- திடீர் பார்கிங் (Sudden braking)
அடுத்தது தான் பலபேருக்கு தலைவலி கொடுக்கும் ரோட் டெஸ்ட். மேற்கண்ட இரண்டு டெஸ்ட்களை முடித்துவிட்டால் நீங்கள் ரோட் டெஸ்ட் எடுக்கத் தயார். உங்களுக்கான நாள் ஒதுக்கப்படும். உங்களுடன் போக்குவரத்து அதிகாரி ஒருவர் காரில் வருவார். நீங்கள் எவ்வாறு வாகனத்தை இயக்குகிறீர்கள் என்பதனை பல்வேறு கோணங்களில் அலசிய பின்னரே நீங்கள் தேறுவீர்களா? இல்லையா? என்பது தெரியும். இருப்பினும் முதல் முயற்சியிலேயே லைசன்சை பெற்றவர்களும் இருக்கிறார்கள். ஆகவே தன்னம்பிக்கையுடன் ஆக்சிலேட்டரில் கை வையுங்கள். மன்னிக்கவும் காலை வையுங்கள்.

எத்தனை நாள் செல்லுபடியாகும்?
ஓட்டுனர் உரிமம் 2 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும்.
21 வயதிற்கு உட்பட்ட ஓட்டுனராக இருந்தால் 1 வருடம் மட்டுமே உங்களது லைசன்ஸ் செல்லுபடியாகும்.
இருசக்கர வாகன ஓட்டுனர் உரிமம் பெறுவது எப்படி?
அதே கதைதான். அமீரக அரசு 30 நாடுகளில் இருந்து இரு சக்கர வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம் பெற்றவர்கள் மட்டுமே தங்களது உரிமத்தை அமீரகத்தில் செல்லுபடியாகும்படி மாற்றிக்கொள்ளலாம் என வரையறுத்துள்ளது. இந்தப் பட்டியலில் இந்தியா இடம்பெறவில்லை. ஆகவே, நம்மாட்கள் அனைவரும் கண்டிப்பாக அமீரகத்தில் இருசக்கர வாகனங்களுக்கான ஓட்டுனர் உரிமம் பெற்றிருத்தல் வேண்டும்.

ரோட் டெஸ்ட் எடுப்பதற்கு முன்னதாக 15 மணிநேர பயிற்சி வகுப்புகளில் கலந்துகொள்ளும்படி அனைத்து ஓட்டுனர் உரிம மையங்களும் வலியுறுத்துகின்றன. அமீரகத்தில் எவ்வாறு வாகனத்தை இயக்குவது? லேனை பயன்படுத்துதல், கியரைக் கையாள்தல் போன்ற அனைத்தும் இந்த வகுப்பில் கற்பிக்கப்படும். முக்கியமாக 8 மணிநேர தியரி கிளாஸ்களில் பங்கேற்க வேண்டும். சில மையங்கள் ஆன்லைன் மூலமாகவே தியரி கிளாஸ்களை எடுக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
தேவையான ஆவணங்கள்
- அசல் எமிரேட்ஸ் ஐடி
- பாஸ்போர்ட் நகல்
- கண் பரிசோதனை
- 2 பாஸ்போர்ட் புகைப்படங்கள்
- தடையில்லா சான்று (குறிப்பிட்ட சிலருக்கு அவரது ஸ்பான்சர்களிடமிருந்து தடையில்லா சான்று பெறுவது அவசியமாகிறது)
- விசாவின் நகல் (உங்களது ஓட்டுனர் மையம் நிர்பந்தித்தால்)
- நீங்கள் இந்தியாவில் ஓட்டுனர் உரிமம் பெற்றவர் என்பதால் சில மணி நேர பயிற்சிகளில் மட்டும் கலந்துகொள்ள விருப்பப்பட்டால் உங்களது செல்லுபடியாகும் இந்திய லைசன்ஸ் ஆங்கில அல்லது அரபு மொழியில் இல்லாதபட்சத்தில் அதனை சட்டப்பூர்வ மொழிபெயர்ப்புடன் சமர்ப்பிக்க வேண்டும். உங்களது லைசன்ஸ் கையெழுத்து அல்லது புத்தக வடிவில் இருந்தால் அதனை துணைத் தூதரக/தூதரகத்தில் அட்டெஸ்ட் செய்து அதன்பின்னர் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பைப் பொறுத்தவரை இலகு ரக வாகனங்களுக்கான நடைமுறைகளே இருசக்கர வாகனங்களுக்கும் பின்பற்றப்படுகின்றன.
பாலைவன வாகன ஓட்டுனர் உரிமம் பெறவேண்டுமா?
பாலைவனத்தில் வாகனங்கள் ஓட்டுவதற்கு பிரத்யேக ஓட்டுனர் உரிமம் அவசியம் என ஷார்ஜா கடந்தவருடம் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம். பாலைவன நிலப்பரப்பில் வாகனத்தை இயக்குவது எப்படி? பாதுகாப்பு வழிமுறைகள் ஆகியவை குறித்த பயிற்சிக்குப் பிறகு இதற்கான உரிமம் வழங்கப்படுகிறது.
இதற்கென ஒருநாள் சிறப்பு வகுப்புகளை ஓட்டுனர் பயிற்சி மையங்கள் வழங்குகின்றன. ஆனால் எல்லா மையங்களிலும் இந்த சேவை இருப்பதில்லை. ஆகவே உங்களது மையத்திடம் இதுகுறித்து கேட்டுத் தெரிந்துகொள்வது நலம்.