UAE Tamil Web

அமீரகக் கொடியில் இருக்கும் நிறங்களுக்குப் பின்னால் இப்படி ஒரு விஷயம் இருக்கா..? இது தெரியாம போச்சே..!

flag

அது 1971 ஆம் ஆண்டு. டிசம்பர் 2 ஆம் தேதி. அமீரகத்தின் கொடியினை ஷேக் சயீத் பின் சுல்தான் அல் நஹ்யான் முதன் முதலில் ஏற்றினார். அதுவரையில் தனித்தனி எமிரேட்கள், தனித்தனி ஆட்சியாளர்கள், தனித்தனி சட்டங்கள் என இயங்கிவந்த 7 ஆட்சியாளர்களும் அமீரக யூனியன் உருவாக்கத்தை ஆதரித்தனர்.

அமீரக யூனியன் என்னும் குடையின் கீழ் அபுதாபி, துபாய், ராஸ் அல் கைமா, அஜ்மான், ஷார்ஜா, புஜைரா மற்றும் உம் அல் குவைன் ஆகிய எமிரேட்கள் ஒன்றிணைந்தன.

அமீரக யூனியன் விஷயம் பேசப்பட்ட உடனேயே அமீரகத்திற்கென்று தனியாக ஒரு கொடியை உருவாக்க அரசு திட்டமிட்டது. இதற்காக அக்காலகட்டத்தில் ஒரு மாபெரும் போட்டி நடத்தப்பட்டிருக்கிறது.

அமீரக கொடியை வடிவமைக்கும் போட்டியில் ஏராளமானோர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். இதில் அப்துல்லா முகமது அல் மாய்னா என்பவரால் (பின்னாளில் இவர் அமீரக வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார்) வடிவமைக்கப்பட்ட கொடி அரசால் ஏற்றுக்கொள்ளப்பட்டு பின்னர் அமீரகத்தின் கொடியாக அறிவிக்கப்பட்டது.

சரி, அமீரக கொடியில் உள்ள 4 வண்ணங்களுக்கும் என்ன அர்த்தம்? பார்த்துவிடலாம்.

சிவப்பு

சிவப்பு கடினத்தன்மை, தைரியம், வலிமை மற்றும் தைரியத்தை குறிக்கிறது. செங்குத்து சிவப்பு பட்டையானது மற்ற அனைத்து நிறங்கள் வெளிப்படுத்தும் அர்த்தங்களையும் ஒற்றுமையுடன் பிணைப்பதாகவும் கொள்ளலாம்.

பச்சை

பச்சை என்பது நம்பிக்கை, மகிழ்ச்சி, நேர்மறை சிந்தனை மற்றும் அன்பைக் குறிக்கிறது. இது நாட்டின் செழுமையையும் குறிக்கும்.

வெள்ளை

வெள்ளை நிறம் அமைதியையும் நேர்மையையும் குறிக்கிறது. மேலும் இது தூய்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

கருப்பு

பொதுவாக அமீரகக் கொடியில் இடம்பெற்றுள்ள கருப்பு, இங்குள்ள எண்ணெய் வளத்தைக் குறிப்பதாக சிலர் கூறுவதுண்டு. ஆனால், உண்மை அதுவல்ல. இது எதிரிகளின் தோல்வியைக் குறிக்கிறது, மேலும் மன வலிமையையும் குறிக்கிறது.

கொடி நாள்

நவம்பர் 3 ஆம் தேதி அமீரக கொடி நாளினைக் கொண்டாட, அமீரக குடிமக்கள், குடியிருப்பாளர்கள், அரசு ஊழியர்களை அழைப்பு விடுப்பதாக அமீரகத்தின் துணைத்தலைவரும் பிரதமரும் துபாயின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

flag
12 Shares
Share via
Copy link