UAE Tamil Web

இந்தியாவிலிருந்து அமீரகத்திற்கு எடுத்துவர மற்றும் இங்கிருந்து இந்தியாவிற்கு எடுத்துசெல்ல தடை விதிக்கப்பட்ட பொருட்களின் முழு பட்டியல்..!

Abu-Dhabi-Airports_

இந்தியாவில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கில் மக்கள் இந்தியா – அமீரகம் இடையே பயணிக்கிறார்கள். இவர்களில் சிலருக்கு எவற்றை எல்லாம் பயணத்தின்போது எடுத்துச்செல்ல அனுமதி உண்டு? எவைக்கெல்லாம் இல்லை? என்பது தெரிவதில்லை. ஆகையால் பலரும் சுங்கத்துறையிடம் சிக்கிக்கொள்வதுண்டு. மண்டைக்குள் தங்கம் வைத்துக் கடத்தும் ஆசாமிகளைத் தவிர்த்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இத்தகைய சிக்கல்களை சந்திக்கும் பொதுமக்களுக்காகவே இந்தப் பதிவு.

- Advertisment -

ஒருங்கிணைந்த சுங்க விதிகளின்படி, சுங்கவரி கட்டாமல் மொத்த அல்லது பாதியளவு பொருளை நாட்டிற்கு உள்ளே எடுத்துவருவது அல்லது இங்கிருந்து பிற நாடுகளுக்கு எடுத்துச்செல்வது அல்லது நுழைவது அல்லது நுழைய முயற்சிப்பது கடத்தல் என வரையறுக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் இருந்து அமீரகத்திற்கு எந்தெந்த பொருட்களை எல்லாம் எடுத்துவரலாம்? எவற்றை எல்லாம் எடுத்துவரக் கூடாது என அமீரக பெடரல் சுங்கத்துறை ஆணையம் வெளியிட்டுள்ள பட்டியலைக் கீழே காணலாம்.

பயணத்தின்போது எடுத்துச்செல்ல அனுமதிக்கப்பட்ட பொருட்கள்

 • டிஜிட்டல் கேமராக்கள்.
 • டிவி மற்றும் ரிசீவர். (ஒவ்வொன்றிலும் ஒன்று)
 • தனிநபர் விளையாட்டு உபகரணங்கள்.
 • சிறிய கணினிகள் மற்றும் பிரிண்டர்கள்.
 • தனிநபர் பயன்பாட்டிற்கான மருந்துகள். (விதிமுறைகளுக்கு உட்பட்டவையாக இருத்தல் வேண்டும்)
 • திரைப்பட திரையிடல் சாதனங்கள். (Movie projection devices)
 • ரேடியோ மற்றும் சிடி பிளேயர்கள்.

மேலும், தனிநபர் 200 சிகரெட்டுகளுக்கு அதிகமாக எடுத்துவரவோ எடுத்துச்செல்லவோ கூடாது.

18 வயதிற்குட்பட்ட நபர்கள் புகையிலை மற்றும் மது பாட்டில்களை பயணத்தின்போது வைத்திருத்தல் கூடாது.

பயணி 3000 திர்ஹம்ஸ்க்கு அதிகமான மதிப்புள்ள பரிசுப் பொருட்களை எடுத்துச்செல்ல/எடுத்துவர அனுமதியில்லை.

அதேபோல 60,000 திர்ஹம்ஸ்க்கு குறைவாக மட்டுமே பணம் மற்றும் பணப்பத்திரங்கள் அல்லது விலை உயர்ந்த கற்கள் எடுத்துச்செல்ல/எடுத்துவர அனுமதியுண்டு.

தடை செய்யப்பட்ட பொருட்கள்

 • போதைப்பொருள்.
 • வெற்றிலை உள்ளிட்ட பான் பொருட்கள்.
 • சூதாட்ட கருவிகள் மற்றும் இயந்திரங்கள்.
 • நைலான் மீன்பிடி வலைகள்.
 • உயிருள்ள பன்றி இன விலங்குகள்.
 • மூல தந்தங்கள்.
 • சிவப்பு விளக்கு தொகுப்பு கொண்ட லேசர் பேனாக்கள்.
 • போலி மற்றும் கள்ள நாணயம்.
 • மதரீதியாக தாக்குதல் அல்லது ஒழுக்கக்கேடான புத்தகங்கள், படங்கள், வரைபடங்கள் மற்றும் கல் சிற்பங்கள்.

தடைசெய்யப்பட்ட அதே நேரத்தில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் அனுமதியின்பேரில் அமீரகத்திற்குள் எடுத்துச்செல்லக்கூடிய பொருட்கள்

 • உயிருள்ள விலங்குகள்.
 • தாவரங்கள்.
 • உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லிகள்.
 • ஆயுதங்கள், வெடிமருந்துகள், வெடிபொருட்கள் மற்றும் பட்டாசுகள்.
 • மருந்துகள் மற்றும் மருத்துவ உபகரணங்கள் மற்றும் கருவிகள்.
 • ஊடக வெளியீடுகள் மற்றும் தயாரிப்புகள்.
 • புதிய வாகன டயர்கள்.
 • டிரான்ஸ்மிஷன் மற்றும் வயர்லெஸ் சாதனங்கள்.
 • மது பானங்கள்.
 • அழகுசாதனப் பொருட்கள் மற்றும் தனிநபர் பராமரிப்புப் பொருட்கள்.
 • மூல வைரங்கள்.

யாரிடம் அனுமதிபெற வேண்டும்?

மேற்கண்ட பொருட்களை பயணத்தின்போது எடுத்துச் செல்பவர்கள் காலநிலை மாற்றம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகம், பாதுகாப்பு மற்றும் ஆயுதப்படை அமைச்சகம், உள்துறை அமைச்சகம், சுகாதாரம் மற்றும் தடுப்பு அமைச்சகம், கலாச்சாரம் மற்றும் இளைஞர் அமைச்சகம், மத்திய அணுசக்தி அமைச்சகம், தொழில் மற்றும் முன்னேற்ற தொழில்நுட்ப அமைச்சகம், தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், துபாய் போலீஸ் மற்றும் கிம்பர்லி UAE ஆகியவற்றிடம் அனுமதி பெற்றிருத்தல் வேண்டும்.

தண்டனை

அமீரக சட்டத்தின்படி தடைசெய்யப்பட்ட பொருட்களை எடுத்துச் சென்றால் அல்லது எடுத்துவந்தால் அபராதம் அல்லது சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம். ஆகவே பயணத்தின்போது மிகவும் கவனமாக இருங்கள். இதனை உங்களது நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.

கடத்தல்: சில எடுத்துக்காட்டுகள்

 • மாநிலத்திற்குள் நுழைந்தவுடன் சுங்கத் துறைக்குச் செல்வதைத் தவிர்ப்பது.
 • பயணிகள் தங்கள் வசம் உள்ள வணிகத் தொடர்பான எந்தவொரு பொருளையும் அறிவிக்காதது.
 • சுங்கத் துறையிடம் பொருட்களை வெளிப்படுத்தாமல் இருப்பது.
 • போலி ஆவணங்களை வைத்திருத்தல்.
 • கடமைகளைத் தவிர்ப்பதற்காக தவறான கையெழுத்துகளைப் பதிவேட்டில் பயன்படுத்துதல்.
 • முறையான இறக்குமதிக்கான ஆதாரங்களை வழங்காமல் தடைசெய்யப்பட்ட அல்லது நிபந்தனையுடன் கூடிய தற்காலிக தடைசெய்யப்பட்ட பொருட்களை கொண்டு செல்வது அல்லது வைத்திருத்தல்.

பயம் இல்லா பயணம் மேற்கொள்ள சில டிப்ஸ்

 • தெரியாத நபர்களின் பொருட்களை எடுத்துச்செல்ல வேண்டாம்.
 • உள்ளடக்கங்களை சரிபார்க்காமல் நண்பர்களின் பொருட்களை எடுத்துக் கொள்ள வேண்டாம்.
 • பணத் தொகைகள் மற்றும் விலைமதிப்பற்ற பொருட்களை அறிவிக்கவும்.
 • சான்றளிக்கப்பட்ட மருந்துச் சீட்டுடன் மருந்துகளை எடுத்துச் செல்லுங்கள்.
 • விமான நிறுவனங்கள் மற்றும் போக்குவரத்து நிறுவனங்கள் வழங்கும் வழிகாட்டுதல்கள் மற்றும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.
 • தடைசெய்யப்பட்ட அல்லது நிபந்தனையுடன் கூடிய தற்காலிக தடைசெய்யப்பட்ட பொருட்கள் பற்றிய தகவல்களை மறைக்க வேண்டாம்.