UAE Tamil Web

அமீரகத்தில் இதையெல்லாம் போட்டோ எடுக்காதீங்க..! – மீறினால் ஜெயில் நிச்சயம்..!

Camera-shops-in-Dubai-

அமீரகத்தில் பொதுவெளியில் புகைப்படம் எடுக்கலாமா? எடுக்கலாம். ஆனால் அதற்கு முன்னர் தெரிந்து கொள்ள வேண்டிய விதிகள் சில உண்டு. ஆம். தனி நபரின் தனியுரிமையை மதியாமல் அவர்களை படம்பிடிப்பதோ அனுமதியின்றி அப்படங்களை பகிர்வதோ உங்களை சட்டச்சிக்கலுக்கு உள்ளாக்கும்.

போட்டோ எடுத்துக்கொள்ள மிகச்சிறந்த சுற்றுலாத் தளங்களை கொண்ட அமீரகத்தில்தான் இத்தகைய கட்டுப்பாடு. தனிநபர்களின் அனுமதியில்லாமல் அவர்களை படம்பிடிப்பதும், தவறான எண்ணத்தோடு  அப்படங்களை ஊடகங்களில் பகிர்வதும் அமீரகத்தின் சைபர் (Cyber), பப்ளிகேசன் (Publication), பீனல் (Penal) மற்றும் காப்பிரைட் சம்பந்தப்பட்ட விதிகளின் கீழ் கடுமையான தண்டனைக்குரியனவாகும்.

2018 ஆம் ஆண்டு சாலை மற்றும் போக்குவரத்துத் துறையின் (RTA) வாடிக்கையாளர் சேவை மையத்தில் அழுது கொண்டிருந்த நபரை ஒருவர் படம்பிடித்துவிட்டார். அதனை இணையத்தில் ரிலீசும் செய்துவிட்டார் அந்த நபர். படமும் வைரலானது. நல்ல தரமான கேமிராவில் எடுத்திருந்தாலும் இன்னொரு நபரின் பிரைவசியை மீறிய குற்றத்திற்காக அந்த புகைப்படக்காரர் கைது செய்யப்பட்டார்.

பின்னர் இது போன்ற செயல்களைத் தடுக்கும் பொருட்டு, துபாய் போலீசார் பொதுமக்களுக்கு அறிவுரை வழங்கினர். மேற்கூறிய குற்றத்தில் ஈடுபடுவோர் மீது  ஃபெடரல் விதி எண் 5 (2012)ன், (சைபர் குற்றங்களைத் தடுக்கிற, தனிநபர் உரிமையில் குறுக்கிடுவதைத் தடுக்கும் சட்டம்) கீழ், பிறரை அவர்களின் அனுமதியின்றி படம்பிடித்தல், அதனை அவர்களின் அனுமதியின்றி இணையத்தில் பகிர்தல் தண்டனைக்குரியது. மேலும், ஹை-டெக் தொழில்நுட்பங்கள் மூலம் பிறரின் பிரைவசிக்குள் ஊடுருவும் குற்றமானது, ஒரு வருடத்திற்கு குறையாத சிறைவாசம் மற்றும் 150000 – 5,00,000 திர்ஹம்களுக்கு இடைப்பட்ட அபராதத் தொகைக்கும் வழிவகுக்கும்.

விபத்துக்களை படம் பிடிப்பது!

2018 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட மற்றுமொரு விழிப்புணர்வு செய்தியில், விபத்துக்களின் புகைப்படங்களைப் பகிர்வது இணைய வாசிகளிடையே குழப்பத்தை உண்டாக்கும் எனவே பொதுமக்களை “அப்படங்களை பகிர வேண்டாம்” என்று காவல்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர்.

இது குறித்துப் பேசிய அபுதாபி காவல்துறை கட்டுப்பாட்டுப் பிரிவின் இயக்குநர் மேஜர் ஜெனரல் சலீம் ஷாஹீன் அல் நுவைமி (Salem Shaheen Al Nuaimi), “இணையம் முழுவதும் பொய்யான செய்திகளால் நிறைந்தது. எனவே இணைய வாசிகள் எதையேனும் பகிர்வதற்கு முன்னர் அதன் உண்மைத்தன்மையை உறுதி செய்துகொள்ள வேண்டும்” என்றார்.

தொடர்ந்து பேசுகையில் “மக்கள், சாலை விதி மீறல்களையும் வதந்திகளையும் பரப்புவதற்கு ஊடகங்களைப் பயன்படுத்தக் கூடாது” என்று அறிவுறுத்தினார். மேலும் அவர், “சட்டத்தை மீறுவோருக்கு எவ்வித மன்னிப்பும் இல்லை” என்றும் இது போன்ற செயல்கள் நிச்சயம் சட்டத்தின் தாக்கத்திற்குட்பட்டது என்றும் எச்சரிக்கையும் விடுத்தார்.

வாகனம் ஓட்டும்போது படம் பிடித்தல்

வாகன ஓட்டிகள் தாங்கள் வாகனம் ஓட்டும்போது படங்கள் எடுப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது. மீறுவோர் 800 திர்ஹம்ஸ் வரை அபராதம் செலுத்த நேரிடுவதோடு நான்கு கருப்பு புள்ளிகளையும் “பரிசாக” பெறக்கூடும்.

கடந்த ஆண்டில், வாகனத்தை இயக்கியவாறே படமெடுத்த நபரொருவரை வழிமறித்த காவல்துறை, அது சாலை விதிகளை மீறும் செயல் என்றும் மீறினால் அபராதம் செலுத்த நேரிடுமென்றும் எச்சரித்து அனுப்பினர்.

சட்டம் கூறுவது என்ன?

UAE யின் சைபர் குற்றத்திற்கான சட்டத்தின் 21 வது விதி கூறுவதென்னவெனில், “பிறரின் ப்ரைவசியினை மீறி, தொழில்நுட்ப வசதிகளைப் பயன்படுத்தி அவர்களை படம்பிடித்தல், படமாக சித்தரித்தல், அதனை பரிமாறுதல், வெளியிடுதல், நகலெடுத்தல், மின்னணு படங்களை சேமித்து வைத்தல் ஆகியன குற்றங்கள். இவற்றுக்கு ஆறுமாத கால சிறை & 150,000 க்கு குறையாத மற்றும்  500,000 திர்ஹம்களுக்கு மிகாமல் அபராதமும் விதித்து தண்டிக்கப்படவேண்டும்.”

கூடுதலாக, UAE தண்டனைச் சட்டம் 378 வது விதி, பெடரல் சட்டம் எண் 3 (1987) இவ்வாறு உரைக்கிறது. “எவர் ஒருவர், பிறருடைய  தனிப்பட்ட அல்லது பிறர் குடும்ப வாழ்கையைப் பற்றிய புகைப்படங்கள், கருத்துக்கள், செய்திகளை வெளியிடும்பட்சத்தில், அவை உண்மையாகவே இருப்பினும், அந்நபர் யாராக இருந்தாலும் ஒரு வருட காலம் வரை சிறைவைக்கபடுவர் மற்றும் அவருக்கு 10,000 திர்ஹம்ஸ் வரை அபராதம் விதிக்கப்படும் அல்லது இரண்டில் ஏதேனும் ஒரு தண்டனை விதிக்கப்படும்.”

அதேபோல, UAE பெடரல் சட்ட எண்.7 (2002), 43 வது விதியானது (காப்பிரைட் தொடர்புடைய சட்டம்) பிறருக்கு உரிய படங்களை அவர்களின் அனுமதியின்றி எடுப்பதோ அல்லது பிரசுரிப்பதையோ தடை செய்கிறது. ஆனாலும் இதற்கு சில விதி விலக்குகள் இச்சட்டத்தில் இடம்பெற்றுள்ளன. அவை,

  • பொது வெளியில் நடைபெற்ற நிகழ்வுகள்
  • அதிகாரிகள் அல்லது தலைவர்கள் அல்லது தேசிய அல்லது சர்வதேச பிரபலங்களுடைய படங்கள் அல்லது
  • பொது மக்கள் நலன் கருதி, அதிலுள்ள அந்நபரின் மரியாதைக்கு குந்தகம் விளைவிக்காத படமாக அது இருப்பின், அதிகாரிகளால் அனுமதியளிக்கப்பட்டதெனில் அவற்றை வெளியிடலாம்.

ஆகவே அடுத்தமுறை கேமராவை எடுப்பதற்கு முன்னர், மேற்கண்ட கூற்றுக்களை மனதில் வைத்துக்கொண்டு கிளிக்குங்கள்.

Camera-shops-in-Dubai-
3 Shares
Share via
Copy link
Powered by Social Snap