அமீரகத்தில், தான் திருமணம் செய்துகொள்ளப்போகும் பெண்ணுடன் ஒன்றாக வசிக்கலாமா? என கல்ஃப் நியூஸ் நிறுவனத்திடம் வாசகர் ஒருவர் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
அமெரிக்காவை பூர்வீகமாகக்கொண்ட இளைஞர் தற்போது அமீரகத்தில் வசித்துவருகிறார். அவருடைய பெண் நண்பரும் அமீரகத்தில் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில் தான் தனது பெண் நண்பருடன் இணைந்து ஒரே பிளாட்டில் வசிப்பது அமீரக சட்டப்படி குற்றமா? அவ்வாறு வசித்தால் எங்களுக்கு அபராதம் விதிக்கப்படுமா? நாங்கள் என்ன மாதிரியான சட்ட விளைவுகளை சந்திக்கவேண்டிவரும்? எனக் கேள்வியெழுப்பியிருக்கிறார்.
துபாயைச் சேர்ந்த அல் ரோவாட் வழக்கறிஞர்கள் மற்றும் சட்ட ஆலோசகர்கள் அமைப்பில் உறுப்பினரான டாக்டர் ஹசன் எல்ஹைஸ் அவர்களிடம் இதுகுறித்து விளக்கம் கேட்கப்பட்டது. அப்போது அவர் ,” சமீபம் வரையிலும் அமீரகத்தில் திருமணம் தாண்டி வெளியே உடல் உறவு வைத்துக்கொள்தல் அல்லது வேறு நபர்களுடன் வசித்தல் என்பது அமீரக தண்டனைச் சட்ட எண் 356 ன் படி குற்றமாகும். இதற்கு அதிகபட்சமாக ஒரு வருட சிறைத்தண்டனையும், தண்டனைக்காலம் நிறைவடைந்தவுடன் நாடுகடத்தப்படவும் வழிவகுக்கிறது அமீரக தண்டனைச் சட்ட எண் 121. நீங்கள் உங்கள் பெண் நண்பருடன் வசிக்க நீங்கள் அவருடன் செய்துகொண்ட திருமணத்தின் சான்றிதழை வைத்திருக்கவேண்டும்”.
“ஆனால் நவம்பர் 8 ஆம் தேதி வெளியிடப்பட்ட ஜனாதிபதி ஆணை, மேற்கூறிய சட்டங்களை சீர்திருத்தத்திற்கு உட்படுத்தியிருக்கிறது. குடும்பம், பரம்பரச் சொத்து, விவாகரத்து, திருமணம் செய்துகொள்ளாமல் இணைந்து வாழ்தல் மற்றும் மது அருந்துதல் போன்றவற்றை நிர்வகிக்கும் சட்ட விஷயங்களை சீர்திருத்தம் செய்வதற்கான ஆணையை அமீரக ஜனாதிபதி சமீபத்தில் வெளியிட்டார்”
“முன்னர் உள்ள சட்டங்களின்படி சம்பந்தம் இல்லாத எதிர்பாலினத்தவர்கள் ஒன்றாக வசிப்பது அமீரகத்தில் குற்றமாகக் கருதப்படும் ஆனால் ஜனாதிபதியின் சமீபத்திய ஆணையானது திருமணமாகாத ஆண் – பெண் ஒன்றாக வசிப்பது குற்றமல்ல என்பதனை உறுதிப்படுத்துகிறது. இந்த ஆணை குறித்த மேலதிக தகவல்களை அதிகாரப்பூர்வ கெஜட்டில் ஆணை வெளியிடப்பட்ட பிறகு தெரிந்துகொள்ள காத்திருக்கிறோம்”என்றார்.
அமீரக ஜனாதிபதி வெளியிட்ட ஆணை குறித்த விரிவான தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.