UAE Tamil Web

அமீரகத்தின் மகத்தான வீரன் மரித்த நாள் – அமீரகமே கொண்டாடும் சலீம் சுஹைல் – யார் இவர்?

salem

அது 1971 ஆம் ஆண்டு நவம்பர் 30. அமீரகமே கொந்தளிப்பில் இருந்தது. எப்போது வேண்டுமானாலும் ஈரான் படை தாக்கக்கூடும் என தகவல் மதியமே வந்துவிட்டது. ராஸ் அல் கைமாவிற்குச் சொந்தமான கிரேட்டர் டன்ப் (Greater Tunb) தீவில் காலடி எடுத்து வைத்தது ஈரான் படை. கைப்பற்றுதல் படலம் அதிவேகமாக நடைபெறத் துவங்கியது.

அந்தத் தீவில் இருந்த ஒரே காவல் நிலையத்தின் மேலே ராஸ் அல் கைம்மாவின் கொடி பறந்துகொண்டிருந்தது. சலீம் சுஹைல் பின் கமீஸ் அல் தமனி (Salem Suhail Bin Khamis Al Dahmani) -க்கு அப்போது வெறும் 20 வயது. அவரது தலைமையின் கீழ் 6 காவலர்கள் அங்கே அப்போது இருந்தனர்.

வேகமாக முன்னேறிய ஈரான் படை, காவல்நிலையத்திற்கு முன்னே அணிவகுத்தது. காவல் நிலையத்தின் மேலே பறந்துகொண்டிருந்த ராஸ் அல் கைம்மாவின் கொடியை கீழே இறக்கும்படி உத்தரவிட்டது ஈரான் படை.

தலைமைப் பொறுப்பில் இருந்த சலீம், ஒருபோதும் கொடியை கீழே இறக்க முடியாது என அறிவித்தார். துப்பாக்கிகள் பேசத் துவங்கின. தனது மார்பில் துப்பாக்கிக் குண்டுகள் துளைத்து வெளியேறும்வரை கொடியை கீழே விடாமல் பாதுகாத்திருக்கிறார் சலீம். அமீரகத்திற்காக உயிரிழந்த முதல் வீரன் சலீமை நாட்டு மக்கள் மற்றும் தலைவர்கள் இன்றளவும் கொண்டாடி வருகின்றனர்.

18 வயதில் காவல்துறையில் சேரும்போது எடுக்கப்பட்ட ஒரே புகைப்படம் தான் இன்று மிஞ்சியிருக்கிறது. வீரர்கள் எப்போதுமே மரிப்பதில்லை. ஒவ்வொரு நாளும் அவர்கள் வரலாற்றின் வழியே உயிர்த்தெழுகிறார்கள்.

கடந்த 2015 ஆம் ஆண்டு ஆகஸ்டு மாதம் அமீரகத்தின் தலைவரும் பிரதமரும் அபுதாபியின் ஆட்சியாளருமான பெருமதிப்பிற்குரிய ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் தியாகிகள் தினம் இனி ஒவ்வொரு ஆண்டும் கொண்டாடப்படும் என அறிவித்தார். அதன்படி சலீம் இறந்த தினமான நவம்பர் 30 ஆம் தேதியன்று அமீரக தியாகிகள் தினமாக அறிவித்தார் ஷேக் கலீஃபா.

தனது உயிரை இழந்தாலும் தனது தேசக் கொடியை விடமாட்டேன் என நாப்பறை ஆர்த்த மாவீரனின் வரலாற்றைப் போற்றுவோம்.

salem
9 Shares
Share via
Copy link