fbpx
UAE Tamil Web

மருத்துவ எமெர்ஜென்சிக்கு அபுதாபியில் எந்த மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்? – மருத்துவமனைகளின் வகைகள்..!

NAT-Shakhbout-Medical-City

விபத்து அல்லது மருத்துவ உதவி அவசரமாக தேவைப்படுகிறது எனில் உடனடியாக சம்பந்தப்பட்ட நபர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட வேண்டும். அபுதாபியின் அனைத்து மருத்துவமனைகளிலும் தீவிர சிகிச்சைப் பிரிவு இருக்கிறது. அவை தங்களுக்கே உரித்தான பாணியில், தங்களிடம் உள்ள உயிர்காக்கும் வழிமுறைகளைக்கொண்டு சிகிச்சை அளிக்கின்றன.

சரி, இவற்றிற்கு ஓர் ஒழுங்குமுறை வேண்டாமா? இங்குதான் அபுதாபு சுகாதாரத்துறை வகைப்படுத்துதலை கொண்டுவருகிறது. அதாவது, குறிப்பிட்ட மருத்துவமனையில் உள்ள உட்கட்டமைப்பு வசதிகள், உபகரணங்கள், மருத்துவர்கள் என்பது போன்றவற்றை கணக்கில் கொண்டு அவற்றிற்கான சான்றிதழை சுகாதாரத்துறை அளித்திருக்கிறது. இப்படி அபுதாபி முழுவதும் உள்ள மருத்துவமனைகளுக்கும் தரச்சான்றிதழ் சுகாதாரத்துறையினால் வழங்கப்பட்டிருக்கிறது.

எல்லா மருத்துவமனைகளும் தரச்சான்றிதழ் பெற்றிருந்தால் அவசர தேவைக்கு எந்த மருத்துவமனையை அணுகுவது என்னும் கேள்வி இயல்பாக எழுகிறது அல்லவா? சுகாதாரத்துறை அளித்திருக்கும் சான்றிதழின்படி அவசரச சிகிச்சை என்று வரும்போது அபுதாபியில் உள்ள மருத்துவமனைகள் இரண்டு வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. அவை,

  1. அவசரகால துறைகள் (Emergency Departments or EDs)
  2. அவசர சிகிச்சை மையங்கள் (Urgent Care Centres)

பார்ப்பதற்கு இரண்டும் ஒன்றுபோலத் தோன்றும். ஆனால் அப்படியல்ல. எந்தெந்த மருத்துவமனைகள் எந்த வகைப்பாட்டில் வருகின்றன என்பதைப் பார்க்கும் முன்னர், அவசரகால துறைகள் மற்றும் அவசர சிகிச்சை மையங்கள் ஆகியவற்றிற்கிடையேயான வித்தியாசத்தைப் பார்ப்போம்.

அவசரகால துறைகள்

அவசரகால துறைகளில் அவசர சிகிச்சை அளிக்கக்கூடிய திறமையான மருத்துவர்கள் மற்றும் பல்துறை மருத்துவ நிபுணர்கள் இருப்பார்கள். உயிர்காக்கும் மருத்துவ உபகரணங்கள், அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சை அளிக்கும் இடங்கள் அமைந்திருக்கும். இங்கே தீவிர சிகிச்சை சேவைகள் 24 மணி நேரமும் வழங்கப்படும்.

எப்போது நாம் அவசரகால துறைகளுக்குச் செல்லவேண்டும்?

கடுமையான மற்றும் உயிருக்கு ஆபத்தான சூழ்நிலைகளால் பாதிக்கப்பட்டவர்கள் அவசர சிகிச்சைப் பிரிவுகளுக்குச் செல்ல வேண்டும். அவை என்னென்ன என்பதைக் கீழே பார்ப்போம்.

  • கடுமையான மார்பு வலி
  • சுவாச சிரமங்கள்
  • உணர்வு இழப்பு
  • கடுமையான இரத்த இழப்பு
  • பலமான காயம்
  • கடுமையான தீக்காயம்
  • ஸ்ட்ரோக் என சந்தேகம் இருந்தால்.

ஆகிய அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அவசரகால துறைகளுக்குச் செல்ல வேண்டும். சரி, அபுதாபியில் உள்ள அவசரகால துறைகளைக்கொண்ட மருத்துவமனைகள் எவை? கீழே காண்போம்.

அபுதாபி

  • கிளீவ்லேண்ட் கிளீனிக் அபுதாபி (Cleveland Clinic Abu Dhabi)
  • ஷேக் கலீஃபா மெடிக்கல் சிட்டி (Sheikh Khalifa Medical City)
  • ஷேக் ஷக்போட் மெடிக்கல் சிட்டி (Sheikh Shakhbout Medical City)
  • NMC ராயல் மருத்துவமனை (NMC Royal Hospital)
  • புர்ஜீல் மருத்துவமனை (Burjeel Hospital)

அல் அய்ன்

  • அல் அய்ன் மருத்துவமனை (Al Ain Hospital)
  • தவாம் மருத்துவமனை (Tawam Hospital)

அல் தஃப்ரா

  • மதினாத் சயீத் மருத்துவமனை (Madinat Zayed Hospital)
  • அல் ருவைஸ் மருத்துவமனை (Al Ruwais Hospital)

அவசர சிகிச்சை மையங்கள்

அபுதாபியின் அனைத்து தனியார் மற்றும் அரசு மருத்துவமனைகளிலும் அவசர சிகிச்சை மையங்கள் இருக்கின்றன. நீங்கள் எந்நேரத்திலும் சென்று உங்களுக்கான சிகிச்சையைப் பெறலாம்.

எப்போது நாம் அவசர சிகிச்சை மையங்களுக்குச் செல்லவேண்டும்?

மிதமான உடல்நலக் குறைபாடு உடையவர்கள் அவசர சிகிச்சை மையங்களுக்குச் செல்ல வேண்டும். அதாவது,

  • பொதுவான உடற் இயக்க சிரமங்கள்
  • சுளுக்கு
  • தையல் போட வேண்டிவந்தால்
  • வெட்டுக்கள்
  • ஏதாவது கடித்துவிட்டால்
  • தடிப்புகள்
  • வெயில் காரணமாக ஏற்படும் தோல் பாதிப்பு
  • ஆரம்ப நிலை சோதனைகள்

மேற்கண்டவற்றிற்கு நீங்கள் அவசர சிகிச்சை மையங்களை நாடலாம்.