அமீரகத்தில் விசா காலம் முடிந்து எவ்வளவு நாள் இலவசமாக தங்கலாம்.?

overstay

ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்களுக்கும், மில்லியன் கணக்கான பார்வையாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் இல்லை என்று சொல்லாமல் விசா வழங்கி கொண்டிருக்கிறது அமீரகம்.

அதில் ரெசிடெண்ட் விசாவாக இருந்தாலும் சரி, சுற்றுலா விசாவாக இருந்தாலும் சரி அல்லது விசிட் விசாவாக இருந்தாலும் சரி, மக்கள் அமீரகத்தின் விதிகளுக்குக் கட்டுப்பட்டு, விசா காலம் முடியும் முன்னே புதுப்பித்தலோ அல்லது சொந்த நாட்டிற்கு திரும்புவதோ மிகவும் முக்கியமாகும்.

அதை தவிர்த்து விசா காலம் முடிந்து சட்ட விரோதமாக தங்குவது பெரிய குற்றமாகும். அவ்வாறு சட்டவிரோதமாக தங்குவதை “ஓவர்ஸ்டே” என்றும் கூறுவர்.

இருப்பினும் எதிர்பாராத சூழ்நிலைகள் காரணமாக, நீங்கள் விசா காலம் முடிந்த பின்னரும் அமீரகத்தில் தங்கியிருந்தால் அல்லது தங்கவேண்டியிருந்தால், கீழே குறிப்பிடப்பட்டுள்ளவை நீங்கள் அறிந்திருக்க வேண்டிய அபராதங்கள் ஆகும்.

சுற்றுலா விசா அல்லது விசிட் விசா

அமீரகத்தில் சுற்றுலா விசா அல்லது விசிட் விசாவில் தங்கியிருப்பவர்கள் விசா முடிந்த பின்னர் 10 நாட்கள் எந்தவித அபராதமும் செலுத்தாமல் தங்கலாம் என்று சட்டம் சொல்கிறது. இந்த கருணை காலத்திற்கு பிறகு நீங்கள் தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

அவ்வாறு நீங்கள் 10 நாட்களுக்கும் மேல் தங்கினால், முதல் நாள் ஓவர்ஸ்டேக்கு 200 திர்ஹமஸ் அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் நாளிலிருந்து தங்கும் ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் 100 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

மேலும், கூடுதலாக அமீரகத்தை விட்டு வெளியேறும் போது குடியேற்ற அலுவலகங்களில் (Immigration Offices) அல்லது விமான நிலையத்தில் நீங்கள் 100 திர்ஹமஸ் சேவைக் கட்டணத்தையும் வேண்டியிருக்கும்.

ரெசிடெண்ட் விசா

அமீரகத்தில் ரெசிடெண்ட் விசாவில் தங்கியிருப்பவர்கள் விசா முடிந்த பின்னர் 30 நாட்கள் எந்தவித அபராதமும் செலுத்தாமல் தங்கலாம் என்று சட்டம் சொல்கிறது. இந்த கருணை காலத்திற்கு பிறகு நீங்கள் தங்கும் ஒவ்வொரு நாளுக்கும் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும்.

அவ்வாறு நீங்கள் 30 நாட்களுக்கும் மேல் தங்கினால், முதல் நாள் ஓவர்ஸ்டேக்கு 125 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும். இரண்டாம் நாளிலிருந்து தங்கும் ஒவ்வொரு கூடுதல் நாளுக்கும் 25 திர்ஹம்ஸ் அபராதம் விதிக்கப்படும்.

இதுவே ஒரு நபர் 6 மாதங்களுக்கும் மேலாக ஓவர்ஸ்டேவில் தங்கியிருந்தால் ஆறு மாதங்களுக்குப் பிறகு தினசரி அபராதம் ஒரு நாளைக்கு 50 ஆக அதிகரித்துவிடும். ஒரு வருடத்திற்கும் மேலாக ஓவர்ஸ்டேவில் தங்கியிருந்தால் அந்த ஒரு வருடத்திற்கு பிறகு தினசரி அபராதம் ஒரு நாளைக்கு 100 ஆக அதிகரித்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Source: UAE Government (https://www.government.ae)

Loading...