இனி சுற்றுலாப்பயணிகள் தாங்கள் செலுத்திய VAT வரியை எளிதில் திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.!

kiosk
Image Credits- Gulf News

அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளின் ஷாப்பிங் மீதான VAT வரியை திரும்பப்பெறுவது மேலும் எளிதாக்கப்பட்டுள்ளது.

எங்கே பெறுவது.?

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் VAT வரிச்சலுகையை விமான நிலையம், நிலப்பகுதி, கடல் வழி போன்றவற்றின் நுழைவு பகுதி மற்றும் வெளியேறும் பகுதியில் மட்டுமே திரும்பப்பெற்று வந்தனர். ஆனால் தற்பொழுது இதை மேலும் எளிதாக்கும் வகையில் அருகிலுள்ள ஷாப்பிங் மால் மற்றும் ஹோட்டல்களில் உள்ள சுய சேவை கியோஸ்க்களில்(kiosk) திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்று மத்திய வரி ஆணையம்(FTA) அறிவித்துள்ளது.

விரிவாக்கம்:

இந்த சுயசேவை கியோஸ்க்களின் உதவியால் இங்கு வரும் சுற்றுலா பயணிகளின் சிரமத்தை குறைத்து, அவர்களுக்கு கூடுதல் சேவைகளை வழங்குவது இதன் நோக்கமாகும். இதன் மூலம் சர்வதேச சுற்றுலா வரைப்படத்தில் ஒரு முக்கிய இடமாக ஐக்கிய அரபு அமீரகம் மாறி வருகிறது என்பதில் சந்தேகமில்லை.

மத்திய வரி ஆணையம்(FTA) வரியை திருப்பிச்செலுத்தும் முறையை செயல்படுத்தும் பொறுப்பை பிளானட்(Planet) என்ற நிறுவனத்திடம் வழங்கியுள்ளது. இந்த நிறுவனம் முதற்கட்டமாக ஒன்பது சுயசேவை கியோஸ்க்களை ஷாப்பிங் மால் மற்றும் ஹோட்டல்களில் அமைத்துள்ளது.

கியோஸ்க்களை பயன்படுத்தும் முறை:

சுற்றுலா பயணிகள் புறப்பட வேண்டிய 24 மணி நேரத்திற்கு முன்பாக ஹோட்டல் அல்லது ஷாப்பிங் மால்களில் நிறுவப்பட்டுள்ள கியோஸ்க்களை பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களிலேயே VAT வரியை திரும்ப பெற்றுக்கொள்ளலாம்.

அடுத்த 24 மணி நேரத்தில் அவர்கள் ஐக்கிய அரபு அமீரகத்தை விட்டு வெளியேறுபவர்கள் என்பதை நிருபிக்க விண்ணப்பதாரர்கள் தங்கள் போர்டிங் பாஸ்(Boarding Pass), அசல் பாஸ்போர்ட்(Original Passport) ஆகியவற்றை ஸ்கேன் செய்ய வேண்டும். பின்னர் சுயசேவை கியோஸ்க்களில் காட்டப்படும் எளிய முறையை பின்பற்றி தாங்கள் செலுத்திய VAT வரிப்பணத்தை திரும்ப பெற்றுக் கொள்ளலாம்.

55 புதிய கியோஸ்க்கள்:

2020 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 55 புதிய சுய சேவை கியோஸ்க்களை நிறுவ பிளானட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது என FTA தெரிவித்துள்ளது. இதில் 25 கியோஸ்க்கள் மால்களிலும், 30 கியோஸ்க்கள் ஹோட்டல்களிலும் நிறுவப்பட உள்ளது.

பயன்படுத்துவதற்கு எளிதானது:

“இந்த VAT வரிச்சலுகையை திருப்பிச் செலுத்தும் மின்னணு திட்டத்தின் மூலமாக சுற்றுலா பயணிகளுக்கு நாங்கள் வழங்கும் சேவைகள் மேலும் விரிவு படுத்தப்பட்டுள்ளது எனவும், இது பயன்படுத்துவதற்கு வேகமாகவும் எளிமையானதாகவும் இருப்பதால் வளர்ந்து வரும் பயனாளர்களுக்கு ஏற்றதாக இருக்கும்” என்று FTA இயக்குனர் கலித் அலி அல் புஸ்டானி தெரிவித்தார்.

3 மில்லியனுக்கும் அதிகமான பரிவர்த்தனை:

நவம்பர் மாதம் 2018 ஆம் ஆண்டு இத்திட்டம் தொடங்கப்பட்டது. 2019 ஜூன் மாத இறுதியில் 1.5 மில்லியன் பணபரிமாற்றம் நடந்துள்ளது எனவும் 2019 இரண்டாம் பாதியில் 0.68% விழுக்காடு உயர்ந்துள்ளது. 2019 இறுதியில் மொத்தமாக 3.2 மில்லியன் பணபரிமாற்றம் நடைபெற்றுள்ளது.

பணத்தை திருப்பி பெறுவதற்கான வழிமுறைகள்:

விண்ணப்பதாரர்கள் பொருளை வாங்கியதற்குறிய வரி விலைப்பட்டியல்(tax invoice), பாஸ்போர்ட் மற்றும் கிரெடிட் கார்டு போன்றவை வைத்திருக்க வேண்டும். அதன் பின்பு பயனாளியின் கிரெடிட் கார்டுக்கு தாங்கள் செலுத்திய வரிப்பணம் திருப்பி அனுப்பி வைக்கப்படும். எனினும் பயனாளியின் கிரெடிட் கார்டுக்கு வரிப்பணத்தை திருப்பி அனுப்புவதற்கு எந்த ஒரு உச்சவரம்பும் கிடையாது என்றும் கூறப்பட்டுள்ளது. இதுவே பயனாளிக்கு பணமாக கொடுக்க நேரிட்டால்(liquid money) அதிக பட்சமாக 7000 திர்ஹம்ஸ் மட்டுமே வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

குறிப்பு: சுற்றுலாப்பயணிகள் தாங்கள் வைத்திருக்கும் வரி விலைப்பட்டியலில் வரி இலவசம் (Tax free) என்று அச்சிடப்பட்டிருந்தால் மட்டுமே தாங்கள் செலுத்திய VAT வரிப்பணத்தை திரும்ப பெறமுடியும்.

இந்த செயல்முறை அனைத்தையும் சுயசேவை கியோஸ்க் மூலம் சுலபமாக செய்ய முடியும்.

ஐக்கிய அரபு அமீரகத்தின் துறைமுகத்திலிருந்து வெளியேறும் பகுதியிலும் VAT வரிப்பணத்தை திருப்பியளிக்கும் அலுவலகம் ஏற்கனவே இருக்கிறது. அதன் மூலமாகவும் VAT வரிப்பணத்தை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். அதில் பணிபுரியும் அதிகாரி ஒருவர் கூறியதாவது; பயனாளிகள் பொருட்களை வாங்கக்கூடிய கடை பதிவு(register) செய்யப்பட்டிருக்க வேண்டும். பதிவு செய்யப்பட்ட கடையை கண்டறிவது சுலபம் தான். கடைக்கு வெளியே வரி இலவசம்(tax free) என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் என்று அவர் கூறினார்.

யாரெல்லாம் வரிப்பணத்தை திரும்ப பெற முடியும்..?

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு வரும் சுற்றுலா பயணிகள் அனைவருக்கும் இது பொருந்தும். முக்கியமாக வரி இலவசம்(tax free) என்று ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருக்கும் கடைகளில் மட்டுமே பொருட்களை வாங்க வேண்டும். மேலும் பொருளை வாங்கிய வரி விலைப்பட்டியல்(tax invoice) 90 நாட்களுக்குள் இருந்தால் மட்டுமே வரிச்சலுகை பெற முடியும்.

Loading...